ராகுல் காந்தியுடன் ஸ்டாலின்.. குமரி காந்தி மண்டபத்தில் மரியாதை: உடன் இருந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் முதலமைச்சர்கள்..!

ன்னியாகுமரி: நேற்று கன்னியாகுமரியில் ஒற்றுமை யாத்திரையை தொடங்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் காந்தி மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு பக்கம் பாஜக ஆயத்தமாகி இருக்கும் காங்கிரஸ் கட்சியும் மறுபக்கம் உட்கட்சி பூசல்களை களைந்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

ஆனால், சமீபத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய தொடர் போராட்டம் அக்கட்சியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க நாடு முழுவதும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவை பெறுக்கவும், ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இன்று ஒற்றுமை யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி.

12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் எந்த அடையாளத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்றும், தலைவர்களின் புகைப்படங்கள், கட்சியின் கொடி, கை சின்னம் போன்ற எதையும் பயன்படுத்த மாட்டோம் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

நேற்று  தொடங்கிய இந்த யாத்திரைக்காக தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதில் காங்கிரஸ் தலைவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று பார்வையிட்டார். இந்த யாத்திரையை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கன்னியாகுமரிக்கு சென்றார். தூத்துக்குடியில் இருந்து காரில் புறப்பட்ட அவரை வழி நெடுகிலும் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இதனை அடுத்து ராகுல் காந்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் காந்தி மண்டபத்தில் ஒன்றாக மரியாதை செலுத்தினார்கள். அவர்களும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சி.வேணுகோபால், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.