வறுமையில் வாடும் கக்கன் மகன்.. மருத்துவ செலவை அரசே ஏற்கும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

நேர்மை, எளிமையின் இலக்கணமாக திகழ்ந்தவர் கக்கன். இவர் இந்திய சுதந்திர போராட்ட வீரர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டவர்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கன், காமராஜர் அமைச்சரவையில் பொதுப் பணித் துறை, மின்சாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் நலத் துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார்.

அமைச்சர் பதவியில் இருந்த கக்கன் அதிகபட்சமாக நேர்மையை கடைப்பிடித்தவர். சிபாரிசு, பரிந்துரை போன்ற வார்த்தைகளை அறவே வெறுத்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கட்சிக்காரர் ஒருவரை அனுமதிக்கப்பட்டிருந்ததை கேள்விப்பட்டு எம்ஜிஆர் அங்கே சென்றார். கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு கிளம்பும்போதுதான், கக்கனும் அங்கே சிகிச்சை பெற்றுவருகிறார் என்று உடனிருந்தவர்கள் சொல்லி உள்ளனர். உடனே, எம்ஜிஆர் பதற்றமடைந்து, ஏன் இதை முதலிலேயே சொல்லவில்லை என்று கேட்டு, கக்கன் எந்த வார்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று விசாரித்து அவரை சென்று பார்த்தார். சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்த கக்கனைக் கண்டதும் எம்ஜிஆர் கண்கள் கலங்கின. அங்கிருந்த டாக்டர்களை அழைத்து கக்கனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். எனினும் கக்கன் சிகிச்சை பலனின்றி கக்கன் 1981 ஆம் ஆண்டு காலமானார். கக்கனின் மறைவுக்குப் பிறகும், அவரது குடும்பத்தினருக்கு இலவச வீடு, அரசு உதவித் தொகை, மருத்துவ வசதிகள் கிடைக்கும்படியும் எம்ஜிஆர் செய்தார்.

தனது இறுதி மூச்சு வரை நேர்மையை கடைப்பிடித்த கக்கனை போன்ற இன்னொரு தலைவர் வருவாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. கடைசி வரை சொந்தமாக வீடு கூட இல்லாதவர் கக்கன்.
கக்கனுக்கு பாக்கியநாதன் (75) என்ற மகன் உள்ளார். இவருக்கு சிறுநீரகமும் இதயமும் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க ரூ 4 ஆயிரம் தேவைப்படுகிறது. ஆனால் அதை செலுத்த முடியாத நிலையில் பாக்கியநாதன் குடும்பத்தினர் உள்ளனர்.

இந்நிலையில், தனது குடும்பத்திற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என பாக்கியநாதனின் மனைவி சரோஜினிதேவி கோரிக்கை விடுத்துள்ளார். அது போல் கணவரின் மருத்துவ செலவையும் அரசே ஏற்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தகவலறிந்த முதல்வர் ஸ்டாலின் உடனடியாக கக்கன் மகனை சிறப்பு வார்டிற்கு மாற்றுமாறு உத்தரவிட்டார். இதயத்திற்கு ஆஞ்சியோ உள்பட அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாகவும் தரமாகவும் அளிக்க உத்தரவிட்டுள்ளார். அவருக்கான சிகிச்சைக்கு ஆகும் செலவை தமிழக அரசு ஏற்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்