உச்சநீதிமன்றம் தான் எங்களது ஒரே நம்பிக்கை- அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!

கர்நாடக அரசு கடந்த சில மாதங்களாகவே உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை தராமல் இருந்து வருகிறது.

இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு தண்ணீர் தர கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.

கடந்த 12ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று வாரியமானது அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்பின், தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினர்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தது குறித்து பேசுகையில், காவேரி விவகாரத்தில் நாங்க தமிழகம் சார்பாக 10 பேர், அவங்க கர்நாடக சார்பாக 10 பேர் சேர்ந்து பேசுகிறோம். அவங்க காவிரியில் தண்ணீர் இல்லைனு சொல்றாங்க. நாங்கள் காவிரியில் தண்ணீர் இருக்குனு சொல்கிறோம்.

காவேரி மேலாண்மை வாரியம் கடந்த 13.09 .2023 அன்று 12,500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கூறினார்கள். ஆனால் இப்போதைக்கு 5 ஆயிரம் தண்ணீர் தான் திறந்து விடுகிறார்கள். இது தொடர்பாக காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கிடம் இதனை தான் கேட்டேன். நாளைக்கு உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. எங்களது ஒரே நம்பிக்கை தற்போது உச்சநீதிமன்றம் தான். ஆஃப் த ரெக்கார்டு நீங்க எந்த பக்கம் சார் இருக்கீங்க? என்று விளையாட்டாக கேட்டுவிட்டு கூட வந்தேன் என பேட்டியளித்தார் அமைச்சர் துரைமுருகன்.