தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தரப்பில் “20 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி வருகிறது. அதனால்தான் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மக்கள் பயன்படுத்தும் தண்ணீரிலும் ஆலை கழிவுகள் கலந்திருக்கிறது” என்பது உள்ளிட்ட நீண்ட வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும், “காப்பர் கழிவுகள், ஜிப்சம் ஆகியவற்றை நீக்கம் செய்யாததே ஆலை மூடப்பட்டதற்கு முக்கிய காரணம்” என தமிழக அரசு தெரிவித்தது. இந்த வாதங்களை முற்றிலும் மறுத்த ஸ்டெர்லைட் நிர்வாகம், ஆலையிலிருந்து வாயு கசிந்ததாகவும், ஆனால் அதனால் பாதிப்பு ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதில், ஆலை குற்றம்சாட்டுவது போல ஸ்டெர்லைட் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் எந்த வரம்பு மீறலும் இருப்பதாக கருதவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை மிகச் சிறப்பாக கையாண்டதாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டும் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து தெரிவித்த உச்சநீதிமன்றம், “சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பதே மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்திய காரணத்திற்காகவே ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆலையின் விதிமீறல்கள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆவணங்கள், தரவுகளை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுபாடு, காப்பர் கழிவுகளை கையாண்ட முறை கவலை அளிக்கிறது.

2013க்கு பிறகு பலமுறை வாய்ப்பு வழங்கிய போதும், ஆலை நிர்வாகம் தனது தவறுகளை சரி செய்யவே இல்லை. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. மக்களின் சுகாதாரம் மிக முக்கியமானது, அதனை புறம் தள்ள முடியாது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகிறது.” என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் எக்ஸ் தள பக்கத்தில், “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது! எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!” என்றுள்ளார்.