மண்எண்ணை கேனுடன் கோவை கலெக்டர் அலுவலம் வந்த தம்பதியால் பதற்றம்..!

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனால் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கணவன் மனைவியை சோதனை செய்தபோது அவர்கள் மண்எண்ணை கேனை மறைத்து வைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது. அவர்கள் தீக்குளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்ததும் தெரியவந்தது. இதனை பார்த்து உஷாரான போலீசார் அவர்களது கையில் இருந்த கேனை பிடுங்கினர். விசாரணையில் மண்எண்ணை கேனுடன் வந்தது
கணபதி மதி கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணி (வயது 40) மற்றும் அவரது மனைவி ராணி (38 ) என்பது தெரியவந்தது. அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, எங்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் எங்களது இடத்தை ஆக்கிரமித்து உள்ளார். இதனால் எங்களுக்கு நடக்கக்கூட வழியில்லை. மழை பெய்தால் வீட்டிற்குள் நீர் புகுந்து விடுகிறது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தோம். அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீ குளிக்க முடிவு செய்து கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தோம் என்றனர். இதையடுத்து போலீசார் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை அங்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.