திமுக நிர்வாகி வெட்டி படுகொலை – மர்ம கும்பல் வெறிச்செயல்.!!

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே திமுக ஒன்றிய செயலாளர் காட்டாங்களத்தூர் ஒன்றிய துணைத்தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

தாம்பரம் அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆராமுதன். இவர் திமுக காட்டாங்களத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். அதேபோல் வண்டலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும், காட்டங்குளத்தூர் ஒன்றிய துணை சேர்மனாகவும் இருந்தார்.

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர் மேம்பாலம் அருகில் படப்பை செல்லும் பிரதான சாலையில் கட்டப்பட்டிருந்த புதிய பேருந்து நிறுத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக தனது
காரில் நேற்றிரவு வந்துள்ளார். இதையடுத்து, அதிவேகமாக வந்து காரில் இருந்து இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள் ஆராமுதன் வந்த காரின் மீது நாட்டு வெடி குண்டை வீசி தாக்கி உள்ளனர்.

மேலும், அங்கிருந்து தப்பிக்க முயன்ற ஆராமுதனை, அடையாளம் தெரியாத கும்பல் சுற்றி வளைத்து அவர்கள் கொண்டு வந்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்து கை துண்டான நிலையில் சாலையில் ரத்த வெள்ளத்தில் ஆராமுதன் சாய்ந்தார்.

அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு ஆட்டோ மூலம் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணிவாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டனர்.

இதையடுத்து, உயிரிழந்த திமுக பிரமுகர் ஆராமுதனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பெருமளவில் குரோம்பேட்டை மருத்துவமனையில் குவிந்ததால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து குரோம்பேட்டை பல்லாவரம் தாம்பரம் காவல் நிலையங்களில் இருந்து 100 மேற்பட்ட போலீசார் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆராமுதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், கொலை செய்யப்பட்ட இடம் மற்றும் குரோம்பேட்டை மருத்துவமனை ஆகிய இடங்களையும் பார்வையிட்டு விசாரணையை மேற்கொண்டனர். அமல்ராஜ் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர். மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், குன்றத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு நாட்கள் முன் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.