நெருங்கும் லோக்சபா தேர்தல்… பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை… தென்னிந்திய மாநிலங்களின் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு..?

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் முதல் பட்டியல் இன்று வெளியாகக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் நேற்று இரவு முதல் விடிய விடிய பாஜக வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக விவாதித்தனர்.

18-வது லோக்சபா தேர்தல் தேதியை மார்ச் 8,9 தேதிகளில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முனைப்புடன் இருக்கின்றன.

மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க முடியும் என்கிற நம்பிக்கையில் உள்ளது. பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் “இந்தியா” கூட்டணியை உருவாக்கி உள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் “இந்தியா” கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் நேற்று இரவு முதல் விடிய விடிய நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று இரவு 10.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் நள்ளிரவைத் தாண்டி 4 மணிநேரம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ம.பி. முதல்வர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

இன்று முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்?: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது என்பதுதான் பாஜகவின் திட்டமாம். இது தொடர்பாக நேற்று இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். பாஜகவின் மூத்த தலைவர்களான பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெயர் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெறக் கூடும்; தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் வேட்பாளர்களும் இன்றைய முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறலாம் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2019 தேர்தல் முடிவுகள்: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மொத்தம் 67.40% வாக்குகள் பதிவாகி இருந்தன. அத்தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக 303 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்தது. அத்தேர்தலில் பாஜக 37.30% வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் 52 இடங்களை பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 19.46% வாக்குகள் கிடைத்தன. 2019 தேர்தலில் திமுக 24 இடங்களில் வென்றது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 22, திரிணாமுல் காங்கிரஸ் 22, சிவசேனா 18, ஐக்கிய ஜனதா தளம் 16, பிஜூ ஜனதா தளம் 12, பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.