மீண்டும் என்ட்ரி கொடுத்த அதே ஆர்எஸ்.பாரதி… அன்று ஜெயலலிதா.. இன்று எடப்பாடி .. ஓபிஎஸ்ஸுக்கு அடித்த மெகா ஜாக்பாட்..!!

சென்னை : அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை டான்சி வழக்கு மூலம் அலற வைத்த ஆர்.எஸ்.பாரதி, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கைக்கும் அக்னிப்பரீட்சை வைத்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கால் ஏற்பட்ட பிரச்சனையால் தான் முதல்வர் பதவி பறிபோனது. அப்போது முதல்வர் ஆனவர் தான் ஓ.பன்னீர்செல்வம்.

இன்று, ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கின் மீதான ஈபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஜெயலலிதாவுக்குச் சிக்கல் கொடுத்த வழக்குகளில் முக்கியமானது டான்சி நில பேர வழக்கு. அதைத் தொடுத்தவர் திமுகவின் இன்றைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவன நிலங்களை, சந்தை விலையை விடக் குறைவான விலைக்கு வாங்கியது சசி என்டர்பிசைசஸ் நிறுவனம். இது ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த நிறுவனம். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டான்சி நில பேர ஊழல் வழக்கில் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து ஜெயலலிதா முறையிட்டதை அடுத்து தண்டனை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா. இதில் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்திவைக்க முடியாது என உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

டான்சி வழக்கு காரணமாக 2001 சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் மனு தாக்கல் செய்தும் அத்தனை தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வென்றாலும், ஜெயலலிதா எம்.எல்.ஏ இல்லை. இந்த ஊழல் வழக்கு காரணமாக ஜெயலலிதா பதவிப்பிரமாணம் செய்தது சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்குவதாக அறிவித்தார் ஜெயலலிதா. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, டான்சி நிலத்தை அரசுக்கே மீண்டும் திருப்பி அளித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் முதன்முதலில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குக் காரணமானது திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த டான்சி வழக்கு தான். இன்று ஓபிஎஸ்ஸுக்கு அதிமுகவில் பெரும் போட்டியாக மாறியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருக்கும் நெடுஞ்சாலைத் துறை ஊழல் வழக்கையும் தொடர்ந்திருப்பவர் அதே ஆர்.எஸ்.பாரதி தான்.

ஆர்.எஸ்.பாரதி எட்டாண்டு காலமாக என் தூக்கத்தை கலைத்தார். எனவே, அவருக்கும் அதே நிலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே, ஆலந்தூர் நகராட்சித் தலைவராகவும், நங்கநல்லூர் வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் ஆர்.எஸ்.பாரதி இருந்தபோது ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா என்று அதிகாரிகளை வைத்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தோண்டித் துருவிப் பார்த்ததாகவும் கூறப்பட்டது. ஆனாலும், ஆர்.எஸ்.பாரதி சிக்கவில்லை. ஜெயலலிதாவை அலற வைத்த ஆர்.எஸ்.பாரதிதான் இன்று எடப்பாடி பழனிசாமிக்கும் குடைச்சலாக மாறியுள்ளார்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ரூ.4800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்தங்களை தனது உறவினர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடைபெற வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வு, சிபிஐ விசாரணை நடத்த கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, சிபிஐ விசாரணை என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் மற்றும் வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில், ‘எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதனை விரைந்து பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து ஓரங்கட்டி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். தனது ஆதரவாளர்களை கட்சியின் முக்கிய பதவிகளில் நியமித்து, கட்சியை முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு ஆதரவாக டெல்லியின் துணையையும் எதிர்பார்த்து வருகிறார். இந்நிலையில் தான், எடப்பாடி பழனிசாமியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

அன்று ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த டான்சி வழக்கு காரணமாக ஜெயலலிதாவின் பதவி பறிபோய், ‘ஆக்சிடெண்டல் சீஃப் மினிஸ்டர்’ ஆனார் ஓபிஎஸ். இன்று அதே ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த நெடுஞ்சாலை ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டு, அதிமுகவில் ஓபிஎஸ்ஸின் கை ஓங்குமா என்பதுதான் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டுமல்லாது அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.