பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி.. 

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி.

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனிடையே, முதல்வர் நிதிஷ்குமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழமை டெல்லி செல்ல முடியவில்லை. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை. அது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அரசியல் விவாதங்களுக்கு மத்தியில், ஜேடியு தலைவர் உபேந்திர குஷ்வாஹா பதவியேற்பு விழாவில் நிதீஷ் குமார் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்த செய்தி வந்துள்ளது. பீகார் முதல்வருக்கும் கடந்த ஜனவரி மாதம் கோவிட்-19 தொற்று ஏற்பட்டது. தொற்று இருப்பது குறித்த தகவலை அவரே ட்வீட் செய்திருந்தார்.

மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு, அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில், பீகார் மாநிலத்தின் துணை முதல்வர்கள் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி உட்பட பல அமைச்சர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.