9 ஆண்டுகளில் 2.47 லட்சம் கோடி தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ளோம்.. முதல்வரின் கேள்விக்கு பட்டியலிட்டு அமித்ஷா பதிலடி..!

9 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு பாஜக செய்தது என்ன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு அளித்த திட்டங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா பட்டியலிட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த கேள்விக்கு 9 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக மத்திய உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், மத்திய அரசு என்ன செய்தது என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பட்டியலுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழகத்துக்கு 95,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக கூறினார். திமுக 18 ஆண்டு காலமாக மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கூட கொண்டு வராதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். தமிழ் மொழியின் தொன்மைக்கு சிறப்பு சேர்த்தவர் பிரதமர் மோடி என்றும் காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்தி பெருமை சேர்த்தவர் என்றும் புகழாரம் சூட்டினார். திருக்குறளை 23 மொழிகளில் மொழிபெயர்த்து அனைத்து மாநில மக்களும் படிக்க வழிசெய்திருப்பதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார். யூபிஎஸ்சி, நீட் உள்ளிட்ட தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கியதும் மோடி தலைமையிலான அரசு தான் என்றும் அவர் கூறினார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12,000 கோடி ஊழல் நடைபெற்றதாகவும் கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் கூட நடைபெறவில்லை என்றும் கூறிய அமித்ஷா, காங்கிரசும், திமுகவும் ஊழல் மட்டுமே செய்யும் கட்சிகள் என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பெயர் எடுத்துள்ளவர் அண்ணாமலை என்றும் அவரின் செயல்பாட்டால் 25 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அமித்ஷா கூறினார். 2024ல் மீண்டும் 300க்கும் அதிகமாக தொகுதிகளை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய ஆட்சி அமையும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.