சமூக வலைத்தளங்களில் சினிமா பாடலில் ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிட்டு மிரட்டல் விடுத்த ரவுடிகள்..!

கோவையில் சமூக வலைதள மோதலால் தொடர் கொலைகள் பழிதீர்க்கும் நோக்கில் ஆயுதங்களுடன் மிரட்டல் வீடியோக்கள் வெளியிட்ட ரவுடிகள் கானா பாடல்களை ஒலிக்க விட்டு சினிமா வில்லன்களையும் மிஞ்சிய வீடியோ..

கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், அதுவும் பட்டப்பகலில் கோர்ட்டு அருகே ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை நகரரையே உலுக்கியது. ரவுடியை கொலை செய்த கும்பல் எந்தவித பதட்டமும் இல்லாமல் ரோட்டில் ஆயுதங்களுடன் நடந்து சென்றதும் மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.

கோவை கொண்டையம் பாளையம் லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 25). ரவுடியான இவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 13-ந் தேதி காலை வழக்கு ஒன்றில் ஆஜர் ஆவதற்காக கோகுல் கோவை கோர்ட்டுக்கு வந்திருந்தார். அவருடன் அவரது நண்பரான மனோஜ் என்பவரும் வந்திருந்தார். கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு கோகுலும், மனோஜூம் ேகார்ட்டின் பின்புறம் உள்ள ஒரு டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டு நின்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வேளையில் ஒரு கும்பல் அவர்களை சுற்றி வளைத்தது. அவர்கள் கோகுலை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். அதனை தடுக்க வந்த நண்பர் மனோஜையும் வெட்டி விட்டு சர்வ சாதாரணமாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
கொலை நடந்த இடம் கோர்ட்டு, கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் என அடுத்தடுத்து இருக்கும் முக்கிய பகுதியாகும். இந்த இடத்தில் அவர்கள் கொலை திட்டத்தை அரங்கேற்றி விட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோகுல் கொலையில் தொடர்புடைய நபர்கள் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பதுங்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களில் 7 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் கோவை காந்திபுரம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஜோஸ்வா (வயது 23), டேனியல் (27), ரத்தினபுரியைச் சேர்ந்த எஸ்.கவுதம் (24), கணபதி லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஹரி என்ற கவுதம் (24), பீளமேட்டைச் சேர்ந்த பரணி சவுந்தர் (20), ரத்தினபுரியைச் சேர்ந்த அருண்சங்கர் (21), சூர்யா (23) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து காரில் கோவைக்கு கொண்டு வந்தனர். வழியில் எஸ்.கவுதம், ஜோஸ்வா ஆகியோர் போலீசாரின் கவனத்தை திசை திருப்பி தப்பி ஓடினர். ஆனால் போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர்கள் 2 பேரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. தற்போது அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 2021-ம் ஆண்டு ரத்தினபுரியைச் சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மற்றொரு ரவுடியான கோகுல் கைதாகி ஜெயிலுக்கு சென்றார். இதனால் குரங்கு ஸ்ரீராமின் நண்பர்கள் கோகுலை பழிதீர்க்க 2 ஆண்டுகளாக காத்திருந்துள்ளனர். இந்தநிலையில் தான் கோகுல் ஜாமீனில் வெளியே வந்து கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தார். அவர் கோர்ட்டுக்கு சென்று வருவதை குரங்குஸ்ரீராமின் நண்பர்கள் கண்காணித்தபடி இருந்தனர். அப்படி பாதுகாப்புக்கு ஆட்கள் யாருமின்றி வருவதை அறிந்து 13-ந் தேதி கோகுலை அவர்கள் வெட்டிக் கொன்றது தெரியவந்தது. தொடக்கத்தில் குரங்கு ஸ்ரீராமும், கோகுலும் தனித்தனியாக ரவுடி கோஷ்டிகளாக செயல்பட்டு உள்ளனர். கட்டப்பஞ்சாயத்து, அடி-தடி போன்ற செயல்களில் ஈடுபடும்போது இவர்கள் 2 தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டுள்ளனர்.

இதுதவிர சமூக வலைதளங்களிலும் அடிக்கடி வீடியோ வெளியிட்டு மோதிக் கொண்ட விவரங்களும் தற்போது வெளியாகி உள்ளது. குரங்கு ஸ்ரீராம் கொலையில் தொடங்கி கோகுல் கொலை வரை அவர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்ட வீடியோக்கள் நீண்டு கொண்டே செல்கிறது. ஒரு சமயம் குரங்குஸ்ரீராம், உன் ஏரியாவுக்குள் வருகிறேன், முடிந்தால் என்னை போட்டு பார் என இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு கோகுலுக்கு அனுப்பி இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த கோகுல் கோஷ்டியினர் குரங்குஸ்ரீராமை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
அதன்பிறகு குரங்கு ஸ்ரீராமின் கோஷ்டியினர் கோகுல் மீது வன்மத்தில் இருந்துள்ளனர். அவரை பழிவாங்கும் நோக்கில் பல வீடியோக்களை தயாரித்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளனர்.
கையில் துப்பாக்கி, பட்டாக்கத்தி, வாள் போன்ற ஆயுதங்களை ஏந்தி நடந்து வருவது போல் வீடியோக்களை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் சினிமா பாடல்களையும், உணர்ச்சிகரமான வசனங்களையும் கோர்த்து ஒரு சினிமா காட்சிகளை போல் உருவாக்கி இருக்கிறார்கள். அதனை மிரட்டல் தொனியில் பலருக்கு பரப்பி உள்ளனர்.

ஸ்ரீராம் பிரதர்ஸ், ஸ்ரீராம் பிளட்ஸ் போன்ற இன்ஸ்ட்ராகிராம் புரொபைல்களிலும், ரத்தினபுரி என்ற பெயரிலும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீராம் இறப்பிற்கு விரைவில் பழிதீர்க்கப்படும் என்று அடிக்கடி இன்ஸ்ட்ராகிராம் ஸ்டோரிகளும் போட்டுள்ளனர்.
பிரகா பிரதர்ஸ் என்ற பெயரில் உள்ள ரவுடி கோஷ்டியினர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் அனைவரும் ஒன்று போல் நெஞ்சில் பச்சை குத்தி வலம் வந்துள்ளனர்.
இவர்கள் வெளியிட்ட வீடியோக்களில் உச்சக்கட்டமாக ஒரு பெண்ணையும் பயன்படுத்தி உள்ளனர். ஒரு பெண்ணின் கையில் கட்டையை கொடுத்து அவர் மிடுக்காக நடந்து வருவது போலவும், அவரை பின் தொடர்ந்து 4 பேர் ரவுடிகள் போலவும் சினிமா பாடல்களை ஒலிக்க விட்டு வீடியோ தயாரித்துள்ளனர். கானா பாடல்களை ஒலிக்க விட்டு சினிமா ஹீரோக்கள், வில்லன்களை மிஞ்சும் வகையில் பல வீடியோக்கள் வெளியிட்டு உள்ளனர்.

இதுபோன்று பழிவாங்கும் படலத்துக்காக 50-க்கும் மேற்பட்ட வீடியோக்களை தயாரித்து இருக்கிறார்கள். இந்த வீடியோக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த வீடியோக்களில் வலம் வருபவர்கள் யார், வீடியோ எடுத்தவர்கள் யார், எடிட்டிங் செய்தவர் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் களமிறங்கி உள்ளனர். இந்த விவகாரத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சந்தீஷ் ஆகியோர் நேரடியாக விசாரித்து வருகிறார்கள். மிரட்டல் வீடியோக்களை வெளியிட்டவர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.