கோவை: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 32). கடந்த 2008-ம் ஆண்டு இவருக்கு 17 வயது இருக்கும் போது மூளையில் ஏற்பட்ட கட்டியால் தனது இரு கண் பார்வையையும் இழந்தார். அப்போது அவர் மாஸ்கம்யூனிகேஷன் 2-ம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்தார். திடீரென பார்வை பறிபோனதால் அவர் மிகவும் பதறிப்போனார்.
இருந்த போதிலும் மனம் தளராமல் பார்வையற்ற மாற்றுத்திறனாளியால் ஓவியம் வரைந்து சாதிக்க முடியும் என்பதை வெளி உலகிற்கு காட்டுவதற்காக ஐதராபாத்தில் உள்ள ஒரு பார்வையற்றோர் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து ஓவியப்பயிற்சி மற்றும் உளவியல் ஆலோசகர் பயிற்சி பெற்றார். பின்னர் அவர் அதே பயிற்சி நிலையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பயிற்சி பிரிவில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். மேலும் அவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தொட்டுணர்வு மூலம் 3டி ஓவியம் வரையும் அம்சத்தை உருவாக்கினார். இந்தநிலையில் கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு கண்காட்சியில் அவர் பங்கேற்றார். அப்போது அந்த கண்காட்சிக்கு சென்று இருந்த கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை அவர் சந்தித்தார். அப்போது கலெக்டருக்கு தான் உருவாக்கிய தோசை மற்றும் சட்னி, சாம்பார் அடங்கிய தத்ரூபமான ஓவியத்தை பரிசாக வழங்கினார்.
அந்த ஓவியத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புகைப்பட மாடத்தில் வைத்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பார்வையிடும் வகையில் காட்சிக்காக வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அந்த ஓவியம் தற்போது கோவை கலெக்டர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து ஐஸ்வர்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, எனது தாய் கடந்த 2000-ம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து எனது தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பின்னர் கடந்த 2004-ம் ஆண்டில் தந்தையும் புற்றுநோயால் இறந்துவிட்டார். எனக்கு ஒரு அக்கா உள்ளார். அவர் திருமணமாகி கேரளாவில் வசித்து வருகிறார். நான் சித்தியுடன் வசித்து வருகிறேன். இந்தநிலையில் எனக்கு கடந்த 2008-ம் ஆண்டு மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக பார்வையை இழந்தேன். அதன்பிறகு நான் ஓவியம் கற்றுக்கொண்டு தொட்டு உணரக்கூடிய 20 வகையான 3 டி ஓவியங்களை வரைந்து உள்ளேன். இதற்காக பிரத்யேமாக வடிவமைக்கப்பட்ட கியூஆர்கோடு மூலம் செல்போனில் ஸ்கேன் செய்து பெயிண்ட் நிறத்தை அறிந்துகொண்டு அந்த பெயிண்ட் மூலம் ஓவியம் வரைந்து வருகிறேன். கோவை வந்தபோது கோவை கலெக்டரை சந்தித்து அவருக்கு நான் ஆசையாக வரைந்த தோசை ஓவியத்தை அளித்தேன். அதற்கு அவர் அங்கீகாரம் கொடுத்து இருப்பது மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் கேட்டபோது, ஐஸ்வா்யா பார்வையை இழந்தும் தன்னம்பிக்கையுடன் உருவாக்கிய ஓவியத்தை நான் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே உள்ள புகைப்பட மாடத்தில் வைக்க உத்தரவிட்டேன். இதனை மாற்றுத்திறனாளிகள் பார்வையிட்டால் அவர்களுக்குள்ளும் இதுபோன்று ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தோணும். மேலும் இதுபோன்று மாற்றுத்திறனாளிகளின் படைப்புகள் கொண்டு வந்துகொடுத்தால் கலெக்டர் அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்படும் என்றார்.
Leave a Reply