மோடி அதானி தொடர்பு பற்றி பேசியது தான் பிரச்சினை.. அதன் எதிரொலியை இப்பொது உணர்கிறேன்- ராகுல்காந்தி பேட்டி.!

டெல்லி: தேசத்திற்கு எதிரான சக்திகளை முறியடிப்பேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். லோக்சபாவில் மோடிக்கும் அதானிக்கும் இடையே என்று தொடர்பு என்று கேள்வி கேட்டதன் எதிரொலியை உணர்கிறேன் என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் மோடி பற்றி பேசியதாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் நீதின்றம் அளித்த உத்தரவின்படி 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ராகுல் காந்தி அனுபவிக்க வேண்டும். ஆனால் அவர் உடனடியாக சிறை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் ராகுலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தகுதி நீக்க அறிவிப்பை அடுத்து ராகுல்காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

தேசத்திற்கு எதிரான சக்திகளை போராடி முறியடிப்பேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். லோக்சபாவில் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான தொடர்பு பற்றி பேசியதன் எதிரொலியை உணர்வதாகவும் கூறினார். ராணுவம், விமானம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடனே முன்வைப்பதாக கூறினார் ராகுல்காந்தி. நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக இதற்கு முன்பாக பலமுறை தெரிவித்துள்ளேன்.

ஜனநாயகம் பற்றி பேசும் பாஜக அரசு லோக்சபாவில் என்னை பேச அனுமதிக்கவில்லை என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். எனக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பார்த்து நான் அஞ்சப்போவதில்லை. அதானியின் போலி நிறுவனங்களில் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்தது யார் என்று கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி அதானி பற்றி அடுத்தடுத்து கேள்வி கேட்பதை தடுக்கவே தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அதானி குழும முதலீடுகளில் சீன நபர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது. 20ஆயிரம் கோடி முதலீடு விவகாரத்தை பாஜக அரசு திசை திருப்புகிறது என்றார். பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பிறகு நான் கவலைப்படவில்லை என்று சொன்னார். இங்கிலாந்தில் பேசியதற்காக மன்னிப்பு கேட்கலாமே என்று சொல்கிறார்கள். மன்னிப்பு கேட்க தான் சவார்க்கர் அல்ல என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

அதானி பற்றி நான் பேசுவதைப்பார்த்து மோடி பயப்படுவதை அவரது கண்களில் பார்த்தேன். நான் அடுத்ததாக அதானி குறித்து பேசிவிடுவேன் என பிரதமர் அஞ்சுகிறார் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். நான் இனி கேள்வி கேட்க கூடாது என என்னை தகுதிநீக்கம் செய்துள்ளார். அதானிக்கும் மோடிக்கும் இடையே உள்ள உறவு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

அதானி குழுமத்தில் சில முதலீடுகளில் சீனாவுக்கும் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டிய ராகுல்காந்தி, எந்த வகையிலும் நான் இந்திய அரசுக்கு எதிராக செயல்படவில்லை, நான் வெளிநாட்டு சக்திகளை அணுகவும் இல்லை என்றும் தெரிவித்தார். இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்கவே போராடுகிறேன். என்னை சிறையில் அடைத்தாலும் நான் பயப்பட மாட்டேன். எனது எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்து அச்சுறுத்தினாலும் அஞ்ச மாட்டேன். எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் கேள்வி கேட்பேன் என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.