கோவையில் போலீசார் விசாரணைக்கு பயந்து வெள்ளி மோதிரத்தை விழுங்கிய  குற்றவாளியால் பரபரப்பு…

கோவையில் போலீசார் விசாரணைக்கு பயந்து வெள்ளி மோதிரத்தை விழுங்கிய  குற்றவாளியால் பரபரப்பு…

கோவை வடவள்ளி பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில், அவரிடம் 5 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் தொண்டாமுத்தூர் பார்பர் காலனி பகுதியை சேர்ந்த விஜய் (26) என்பது தெரியவந்தது. மேலும், கடந்த மாதம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் 1,200 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து சிறை சென்றவர் என்பதும் சிறையில் இருந்து வெளியில் வந்தவர், மீண்டும் கஞ்சா விற்பனை ஈடுபட்டு வந்ததும், சோதனையில் தெரியவந்தது.

இந்த நிலையில், போலீசார் விசாரணைக்கு பயந்து காவல் நிலையத்தில் விஜய், தன் கையில் அணிந்திருந்த வெள்ளி மோதிரத்தை விழுங்கியுள்ளார். இதுகுறித்து சக போலீசாரிடம் வயிறு வலிப்பதாக தெரிவித்தும், தான் மோதிரத்தை விழுங்கியது குறித்தும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, போலீசார் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வயிற்றை ஸ்கேன் செய்தனர். பரிசோதனையில், விஜயின் வயிற்றில் வெள்ளி மோதிரம் இருந்ததை உறுதி செய்த போலீசார், உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர் மூலம் சிகிச்சை கொடுத்து மோதிரத்தை வெளியே எடுத்தனர். போலீசார் விசாரணைக்கு பயந்து வெள்ளி மோதிரத்தை விழுங்கிய கைதியால் வடவள்ளி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.