கோவை மாவட்டம் அன்னூரில் சத்தி சாலையில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ். இவர் நேற்றிரவு கோவை சாலையில் உள்ள ஒரு தனியார் ஷவர்மா உணவகத்தில் ஆன்லைன் வாயிலாக ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.அதன் பின் வாங்கி வந்த அந்த உணவை ஆண்ட்ரூஸ் உண்ணும் போது அவருக்கு வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் இதுகுறித்து சம்பந்தபட்ட கடை உரிமையாளரிடம் தட்டி கேட்டுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆண்ட்ரூஸ்க்கு ஆதரவாக சிலர் திரண்டு அந்த ஷவர்மா உணவகத்தை முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அது குறித்து புகார் அளித்தால் விசாரிப்பதாக கூறிய நிலையில் ஆண்ட்ரூஸ் அன்னூர் காவல் துறையில் புகார் செய்தார்.அதனை தொடர்ந்து பிரச்சனைக்குரிய அந்த உணவை பறிமுதல் செய்த போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி அவர்கள் மூலம் ஆய்வு செய்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.