பாமகவில் இருந்து திமுக கட்சிக்கு தாவியதால் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த ஊர்மக்கள்..!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பணங்காட்டுப்பாக்கம் ஊராட்சி உள்ளது.

இந்த ஊராட்சியில் மற்ற கட்சிகளை விட பாமக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. இப்படி இருக்கும் இந்த ஊராட்சியில் இதுவரை ஒருமுறைதான் தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலின் பொழுது தலைவர் பதவி ஆகியவை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது இந்த ஊரின் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த முறையும் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியின்றி, ஊர் ஒற்றுமையுடன் 52-வயதான தனசேகர் என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். பணங்காட்டுப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த 34-வயதானை அருண்குமார் என்பவர் பாமகவின் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். நடந்து முடிந்த ஊராட்சி ஒன்றிய தேர்தலில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு, பாமக சார்பில் மாம்பழம் சின்னத்தில் அருண்குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி அன்று குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர் அருண்குமார் தலைமையில் , 2வது வார்டு உறுப்பினர் நரசிம்மன் உள்ளிட்ட சுமார் 2000த்திற்கும் மேற்பட்டோர் பாமகவில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்களை தொடர்ந்து பாமகவை சேர்ந்த பணங்காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் பாமகவில் இருந்து விலகி கடந்த ஜுன் மாதம் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

பாமகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் அருண்குமார் வீட்டின் சுவற்றில், வரைந்து வைத்திருந்த மாம்பழம் சின்னத்தின் மீது அநாகரிகமான வார்த்தைகளை கொண்டு எழுதியுள்ளனர். ஊர் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் கட்சி மாறியதால், கடந்த ஜுன் மாதம் 7ம் தேதி பணங்காட்டுப்பாக்கத்தில் ஊர் கூட்டம் நடத்தினர். அதில் தனசேகர் கட்சி மாறியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

இளைஞர்கள் சிலர் மின்சாரத்தை துண்டித்துவிட்டு ஒன்றிய குழு உறுப்பினர் அருண்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் இருவரின் உருவ பொம்மையை எரித்துள்ளனர். அதை தொடர்ந்து காயார் காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஒன்றிய குழு உறுப்பினர் அருண்குமார், ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர், வார்டு உறுப்பினர் நரசிம்மன் ஆகிய மூவரும் இறந்துவிட்டதாக அவர்களுக்கு தனித்தனியே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை தயார் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். அரசியலில் கட்சி விட்டு கட்சி மாறுதல் புதிதும் இல்லை, இப்படி இருக்க பாமகவிலிருந்து திமுகவிற்கு கட்சி மாறியதால் ஊராட்சி மன்ற தலைவரையும், ஒன்றிய குழு உறுப்பினரையும், வார்டு உறுப்பினரையும் அநாகரிகமான வார்த்தைகளில் விமர்சித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.