கனிம வள கொள்ளை… புரளும் கரன்சி… தடுக்க அரசு கொண்டு வந்த புது திட்டம்.!!

னிம வள கொள்ளையை தடுக்க, கனிம பொருட்களை வாங்கும் போது, அரசு அனுமதி சீட்டையும் நுகர்வோர் கேட்டு பெறவேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வர, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.’குவாரிகளில் புல தணிக்கை என்ற பெயரில் கூடுதல் அபராதம் விதிப்பதோடு, பல கோடி ரூபாய் மாமூல் கேட்கின்றனர்’ என்று கூறி, தமிழக குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சமீபத்தில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், தமிழகம் முழுவதும் கட்டுமான பணிகள் முடங்கின.கனிம வள துறை அமைச்சர் துரைமுருகன், குவாரி, கிரஷர் உரிமையாளர்களுடன் பேசி, போராட்டத்தை வாபஸ் பெற வைத்தார்.ஆனாலும், குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களிடம் மாதம், 100 கோடி ரூபாய் மாமூல் வசூலித்து தரும்படி, கீழ் நிலை ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுத்த உயர் அதிகாரியை, கனிம வள துறையில் இருந்து மாற்ற வேண்டும் என குவாரி உரிமையாளர் சங்கத்தினர்அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.குவாரி உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:கனிம வள துறையில், கடந்த ஆளும்கட்சி தலைமைக்கு வேண்டப்பட்ட ஒரு, ‘சக்தி’ வலுவாக செயல்படுகிறது. அந்த சக்தி தான், மேல் அதிகாரி வாயிலாக இலக்கு நிர்ணயித்து மாமூல் வசூல் செய்கிறது.இப்படி சட்டவிரோதமாக மாமூல் கொடுப்பது நின்றால் தான், தமிழகத்தில் குவாரி தொழில் நியாயமாக நடக்கும். கனிம பொருட்கள் விலையும் நியாயமாக இருக்கும்.இதை தடுக்க, மத்திய கனிம வளத்துறை அதிகாரிகள், மாநில அரசுகளுக்கு சில யோசனைகளை முன் வைத்துள்ளனர்.ஜல்லி, எம் – சாண்ட், ஆற்று மணல், சவ்வூடு மணல் போன்ற கனிம பொருட்களை திருட்டுத்தனமாக, ‘யார்டு’களில் இருந்து லாரிகளில் எடுத்து சென்று விற்கின்றனர்.நடைச் சீட்டு என்ற அனுமதி சீட்டு எதுவும் இல்லாமல் கனிம பொருட்களை ஏற்றி அனுப்ப தான் அதிகாரிகள் பணம் பெறுகின்றனர்.தமிழகம் முழுவதும், அரசு கட்டுமான பணி மற்றும் சாலை பணிகளுக்கு மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்ததாரர்கள் மாதம் தோறும் கனிம பொருட்களை வாங்குகின்றனர். தனியார் கட்டுமான பணிகளுக்கும் வாங்கப்படுகிறது.கனிம பொருட்கள் வாங்கும் போதும் பணம் கொடுத்ததற்கான ரசீது பெறும் போதும், ஒவ்வொரு லோடுக்குமான முறையான அனுமதி நடை சீட்டை நுகர்வோர் கட்டாயம் பெற வேண்டும் என உத்தரவு போட்டால், கனிம வள கொள்ளை ஓரளவுக்கு தடுக்கப்படும்.வீட்டில் கணக்கில் காட்டப்படாத பணம் வைத்திருப்பது எப்படி குற்றமோ, அதே போல முறையான நடை அனுமதி சீட்டு இல்லாமல் கனிம பொருள் வைத்திருப்பது குற்றம் என்று அறிவிக்க வேண்டும். மீறி வைத்திருப்போர் மீது வழக்கு போட வேண்டும். அப்படி செய்யும்போது, கனிம பொருட்கள் வாங்குவோர், கட்டாயம் நடை அனுமதி சீட்டையும், ரசீதோடு கேட்டு வாங்கி வைத்துக் கொள்வர்.இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு தரப்பில் தீவிர ஆலோசனை நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.