ஆன்லைன் ஆர்டர் செய்த செல்போன் வராததால் பணத்தை வாலிபருக்கு திரும்பி வழங்க வேண்டும்-கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!

கோவை அடுத்த அத்திப்பாளையம் அருகே கோவிந்தநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆன்லைன் நிறுவனத்தில் செல்போன் ரூபாய் 25 ஆயிரம் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று செலுத்தினார். அப்பொழுது ஒரு வாரத்திற்குள் செல்போன் வந்து சேரும் என்று ஆன்லைன் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அந்த நிறுவனம் செல்போனை அனுப்பி வைக்கவில்லை இது பற்றி முருகேசன் கேட்டபோது கோவையில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தின் பெயரைக் கூறி அங்கு சென்று வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளனர். அதன்படி அந்த கூரியர் நிறுவனத்திற்கு சென்று கேட்டபோது செல்போன் எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த முருகேசன் கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் ரூபாய் 25 ஆயிரம் பெற்றுக் கொண்டு செல்போன் அனுப்பாமல் ஆன்லைன் நிறுவனம் ஏமாற்றியதாகவும் இதனால் அவர் அனுப்பிய தொகை 25 ஆயிரம் ரூபாய் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அதற்கு இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செல்போனுக்கு பணம் செலுத்திய அவருக்கு ரூபாய் 25 ஆயிரம், மன உளைச்சலுக்கு ரூபாய் 10 ஆயிரம் வழக்கு செலவிற்கு ரூபாய் 3,000 த்தையும் 9 மாத வட்டியுடன் ஒரு மாத காலத்திற்குள் ஆன்லைனில் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.