தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு மேற்கு வங்கத்தில் தடை… ம.பி., உ.பி., உத்தரகண்டில் வரி விலக்கு.!!

க்னோ: மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து, உத்தர பிரதேசம், உத்தரகண்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுவதாக, அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள, ‘தி கேரளா ஸ்டோரி’ படம், தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், 5ம் தேதி நாடு முழுதும் வெளியானது.
இப்படத்திற்கு எதிராக, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் இப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, ம.பி.,யில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார். இந்நிலையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் உ.பி.,யில், இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, பா.ஜ., ஆளும் மற்றொரு மாநிலமான உத்தரகண்டிலும், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரி விலக்கு அளிப்பதாக, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று அறிவித்தார். இதற்கிடையே, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்த கேரள உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, வரும் 15-ல் விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புதல் தெரிவித்தது.