சூடுபிடித்துள்ள இறுதி கட்ட விசாரணை: எடப்பாடிக்கு எதிராக ஒவ்வொரு அஸ்திரமாக வீசியும் பலன் இல்லை … கடைசியாக பிரம்மாஸ்திரம் கையிலெடுக்கும் ஓபிஎஸ்.. பதற்றத்தில் மாஜி மும்மூர்த்திகள்..!

எடப்பாடிக்கு எதிராக ஒவ்வொரு அஸ்திரமாக எடுத்து வரும் ஓபிஎஸ் கடைசி பிரம்மாஸ்திரமாக கொடநாடு வழக்கை கையில் எடுக்கப் போகிறார் என்ற பரபரப்பு எழுந்திருப்பதால், கொங்கு மண்டலத்தை மாஜி மும்மூர்த்திகள் பதைபதைப்பில் உள்ளனர் என்று தகவல்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீசாரின் மறுவிசாரணை இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. 90% விசாரணை முடிவடைந்து இருக்கிறது. இன்னும் பத்து சதவிகித விசாரணை மட்டுமே பாக்கி இருக்கிறது. இதுவரைக்கும் சசிகலா உட்பட 280க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வீடியோ மூலமாக வாக்கு மூலமும் பதிவு செய்திருக்கிறார்கள்.

அநேகமாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கொடநாடு விவகாரம் ரொம்பவே சூடு பிடிக்கும் என்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பாகவே ஓபிஎஸ் எடப்பாடிக்கு எதிரான கடைசி பிரம்மாஸ்திரமாக கையில் எடுக்கப் போகிறார் என்கிறார்கள். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பக்கம் பெரும்பான்மையான கட்சி நிர்வாகிகள் ஆதரவு போய்விட்டதால் அதிமுகவின் சட்ட விதிகளை வைத்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் ஒபிஎஸ் . இந்த அஸ்திரமும் எடுபடாமல் போய்விட்டால் கடைசியாக ஓபிஎஸ் எடுக்கப் போகும் பிரம்மாஸ்திரம்தான் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரடியாக தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், ஓ .பன்னீர்செல்வம் அடிக்கடி கொடநாடு கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை அம்பலப்படுத்துவேன் என்று சவால் விட்டு வருகிறார். ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப்பும் கூட அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம் தலைவிரித்து ஆடுவதால் கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார் . சசிகலாவும் கூட தேர்தல் வாக்குறுதியில் ஸ்டாலின் சொன்னபடி கொடநாடு வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருக்கிறார். டிடிவி தினகரனும் இதே கோரிக்கையை முன் வைத்திருக்கிறார் . ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கமும் இந்த கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.

ஓபிஎஸ் சட்டப் போராட்டங்களில் தோல்வியுற்று தன் பக்கம் எந்த ஆதரவுமே இல்லாமல் நிராயுதபாணியாக நிற்கும் நேரத்தில் கொடநாடு வழக்கை தான் ஓபிஎஸ் கடைசி பிரம்மாஸ்திரமமாக எடுக்கப் போகிறார் என்ற பரபரப்பு பேச்சு எழுந்திருக்கிறது. இதனால் கொங்கு மண்டலத்தில் உள்ள மாஜி மும்மூர்த்தி அமைச்சர்கள் பதைபதைப்பில் உள்ளனர் என்கிறது அதிமுக வட்டாரம்.

இந்த கொடநாடு வழக்கில் போலீசாரின் குற்ற பத்திரிக்கையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ள பெயர்கள் வெளி உலகத்திற்கு தெரிய வரும்போது அதிமுக அமைச்சர்கள் பலரின் அரசியல் வாழ்க்கையே அஸ்தமித்து போய்விடும் என்கிறார்கள். அதிலும் கொங்கு மண்டலத்தில் இருக்கும் அந்த மாஜி மும்மூர்த்தி அமைச்சர்களுக்கு தான் பயங்கர சிக்கல் என்பதால் அவர்கள் பதைபதைப்பில் இருப்பதாகவும் தகவல்.