சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை… 7வது முறையாக புறக்கணித்த கேஜரிவால்.!!

அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அமலாக்க இயக்குநரகத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

புது தில்லி: தில்லி கலால் கொள்கையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அமலாக்க இயக்குநரகத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதன் மூலம், அமலாக்கத் துறையின் 7வது சம்மனையும் கேஜரிவால் தவிர்த்துள்ளார்.

அமலாக்கத் துறையின் ஏழாவது சம்மன் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கேஜரிவாலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த சம்மன் ‘சட்டவிரோதம்’ என்று கூறிய கட்சி, கேஜரிவாலுக்கு மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத் துறை காத்திருக்க வேண்டும் என்றும், இந்தியா கூட்டணியிலிருந்து வெளியே முடியாது என்றும் ஆம் ஆத்மி தரப்பில் கூறியுள்ளது.

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பாக அமலாக்க இயக்குநரகம் கேஜரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவா் தொடா்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வருகிறார்.

தில்லியில் கேஜரிவால் அரசை கவிழ்த்து, தில்லியில் ஆம் ஆத்மி அரசை வீழ்த்தவே, பாஜக அரசு அவரை கைது செய்ய விரும்புவதாக கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைமை குற்றம்சாட்டி வருகிறது.

2021-22-ஆம் ஆண்டிற்கான தில்லி அரசின் கலால் கொள்கை மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்க அனுமதித்ததாகவும், அதற்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் சில டீலா்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி மீண்டும் மீண்டும் மறுத்துள்ளது.

ஜூலை, 2022-இல் தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, தில்லி கலால் கொள்கை அமலாக்கத்தில் முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்ததை அடுத்து, தில்லி கலால் கொள்கை ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சிபிஐயைத் தொடா்ந்து அமலாக்கத் துறையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்தது.