அமலாக்கத்துறை தனது கடமையை செய்துள்ளது… யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் பா.ஜ.கவிற்கு இல்லை – அண்ணாமலை பேச்சு.!

மைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை செய்து வந்த நிலையில் இன்று காலை அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”நீட் தேர்வில் இந்திய அளவில் முதல் 10 பேரில் 4 பேர் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. 54.4 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளோம். நீட் தேர்வை அனைவருமே ஏற்றுக்கொண்டனர்.

நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வந்தனர். போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் போது வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டார். 2014 ஆம் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குற்றம் செய்தததாக சார்ஜ் ஷீட் பதிவு செய்யப்பட்டது. மே 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த போது மின்சாரத்துறை அமைச்சராக பொறுபேற்றார். பின் குற்றம்சாட்டப்பட்ட சன்முகம் தரப்பில் குவாஷ் பெட்டிஷன் போடப்பட்டது, இதனை சென்னை உயர் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டது. 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், விசாரணை நடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது” என வழக்கு பற்றிய விவரங்களை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”நேற்று அமலாக்கத்துறை தரப்பில் சோதனை நடத்தப்பட்டு வந்தது. இது எந்த விதத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாகும்? எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது மு.க ஸ்டாலின், செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். உண்மையாக சட்டத்தை மதிப்பவராக இருந்தால் அமலாக்கத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குற்றவாளி என உச்சநீதிமன்றம் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சரே கூறியிருக்கும் நிலையில், இது மிகப்பெரிய தலைக்குனிவாகும். அமலாக்கத்துறை தனது கடமையை தெளிவாக செய்துள்ளது. இதில் யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் பா.ஜ.க விற்கு இல்லை” என கூறியுள்ளார்.

மேலும், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இன்று மதியம் விசாரணைக்கு வருகிறது, இந்த வழக்கில் அமலாக்கத்துறை தகுந்த பதிலளிக்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் எதுவும் இல்லை என்றார். நீட் வருவதற்கு முன் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் அரசு கல்லூரியில் பயின்றனர்? நீட் தேர்வுக்கு பின் எத்தனை பேர் பயின்றுள்ளனர்? என்பதை அரசு வெள்ளையறிக்கையாக வெளியிட வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்ட போது கூட திமுக இவ்வளவு தீவிரம் காட்டவில்லை. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்த போது ஏன் இவ்வளவு தீவிரம் காட்டப்படுகிறது. முதலமைச்சர் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிட்டு, வேரு ஒருவருக்கு அந்த துறையை ஒதுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.