பஸ் ஓட்டும் போதே ஆட்டம் போட்ட டிரைவர்… சுற்றுலாவுக்கு சென்ற பள்ளி மாணவர்கள் பலிக்கு காரணமான ஓட்டுநரின் அலட்சியம்..!

திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலாவுக்கு புறப்பட்ட பள்ளி மாணவர்கள் விபத்தில் பலியான சம்பவத்துக்கு காரணமான பஸ் டிரைவர், இருக்கையில் இருந்து எழுந்து நின்று நடனமாடிய வீடியோ வைரலாகி இருக்கிறது.

கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஊட்டிக்கு இருதினங்களுக்கு முன் சுற்றுலா புறப்பட்டனர். அவர்கள் சென்ற பஸ், பாலக்காடு அருகே வடக்கஞ்சேரியில் கேரள அரசு பஸ்சின் பின்னால் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சுற்றுலா பஸ்சை ஓட்டிய டிரைவர் ஜோமோன், விபத்துக்கு பிறகு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி பெற்று தலைமறைவு ஆனார். பின்னர் அவரை போலீசார் கொல்லத்தில் பிடித்தனர். இந்நிலையில், டிரைவர் ஜோமோன் இதற்கு முன்பு வேறு பள்ளி மாணவர்களுடன் சுற்றுலா சென்றபோது இருக்கையை விட்டு எழுந்து நின்று நடனமாடியபடியே பஸ் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பஸ்சில் இருந்த மாணவர்கள் இதனை பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், கேரள போக்குவரத்து ஆணையாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

அதன்படி, ஆணையாளர் ஏடிஜிபி ஜித் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது அவர், ‘விபத்திற்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். கேரளா சாலைகளில் 1.67 கோடி வாகனங்கள் ஓடுகின்றன. ஆனால், மோட்டார் போக்குவரத்து துறையில் 328 அதிகாரிகள் மட்டுமே உள்ளனர்,’ என தெரிவித்தார். பின்னர் நீதிபதி தேவன் ராமசந்திரன், ‘போக்குவரத்து விதிகளை யாரும் மதிப்பதில்லை. வடக்கஞ்சேரியில் நடந்தது போன்ற விபத்துக்கள் இனி கேரளாவில் நடக்கக் கூடாது,’ என உத்தரவிட்டார்.