பண்ணாரி அம்மன் திருவீதி உலா… பெண் பக்தர்கள் சப்பரம் முன்பு படுத்து நேர்த்திக் கடன்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வரும் ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம்  தேதிகளில் குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. விழாவை ஒட்டி தற்போது பண்ணாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று காலை இக்கரை நெகமம் புதூர் பகுதியில் மலைவாழ் மக்களின் பீனாட்சி வாத்தியம் முழங்க பண்ணாரி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பண்ணாரி அம்மன் சப்பரம் செல்லும் வழியில் உள்ள தார்சாலையில் நீண்ட வரிசையில் நெடுஞ்சாண்கிடையாக படுத்து அம்மனை வழிபட்டனர். சாலையில் படுத்து இருந்த பெண்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டு பெண்களின் மீது பண்ணாரி அம்மன் சப்பரம் திருவீதி உலா சென்றது. இவ்வாறு அம்மனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என ஐதீகம் உள்ளதாக கிராமப் பகுதி பெண் பக்தர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வெள்ளியம்பாளையம், தயிர்ப்பள்ளம், கொத்தமங்கலம், பகுடுதுறை, முடுக்கன்துறை வழியாக பண்ணாரி அம்மன் சப்பரம் தொட்டம்பாளையம் கிராமத்தை சென்றடைந்தது. இன்று வெள்ளியம்பாளையம் புதூர், இக்கரை தத்தப்பள்ளி, அக்கரை தத்தப்பள்ளி கிராமங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது..