சமூக விரோதிகளின் தைரியத்திற்கு காரணமே திமுக அரசு தான்-வானதி சீனிவாசன் குற்றசாட்டு..!

கோவை : ”பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில், என்.ஐ,ஏ.,வுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால் இன்னும் பல விஷயங்கள் வெளிவரும்,” என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கோவைப்புதுார், குனியமுத்துார் பரத் நகர், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், 100 அடி ரோடு உள்ளிட்ட ஆறு இடங்களை, வானதி சீனிவாசன் நேற்று பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது, அவர் கூறிய தாவது:கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களில் மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட போது அருகில் ஆட்கள் விழித்து இருந்ததால், உடனே தீயை அணைத்துள்ளனர்; இல்லையேல் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.குண்டு வீசப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் என்ன நடக்குமோ என்ற பதட்டத்துடன் உள்ளனர்.

தி.மு.க., ஆட்சியில் இருப்பதால், சமூக விரோதிகளுக்கு இவ்வளவு தைரியம் வந்துள்ளது. சிறுபான்மையினர் ஓட்டுக்காக, தி.மு.க. இதுபோன்ற சம்பவங்களை கண்டு கொள்ளால் இருக்கிறது.என்.ஐ.ஏ., சோதனை வாயிலாக, பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., போன்ற அமைப்புகளின் சதி திட்டங்கள் தெரிய வந்து உள்ளது.

என்.ஐ,ஏ.,வுக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால், இன்னும் பல விஷயங்கள் வெளிவரும். முதல்வர் இந்த பிரச்னையில் தலையிட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.