அத்வானியின் 95ஆவது பிறந்தநாள் – பிரதமர் மோடி நேரில் வாழ்த்து..!

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் 95ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

டெல்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் கட்சி தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி இன்று (நவம்பர் 8) தனது 95ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளுக்கு கட்சியின் மூத்த தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் டெல்லியில் உள்ள அத்வானியின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்புக்குப்பின் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “அத்வானியின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். நாட்டின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மகத்தானது. அவரது தொலைநோக்கு பார்வையாலும், அறிவுத்திறனாலும் நாடு முழுவதும் மதிக்கப்படுகிறார். பாஜகவை கட்டியெழுப்பியதிலும், வலுப்படுத்தியதிலும் அவரது பங்கு ஈடு இணையற்றது. அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.