சேலம்: சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணழி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்துள்ள வெள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.
இவரது மகள் மேச்சேரியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். காலை வழக்கம் போலப் பெரியப்பா அவரை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டுள்ளார்.
இன்று காலை பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ- மாணவிகளும் பிரேயருக்கு சென்று உள்ளனர். இருப்பினும், இந்த மாணவி பிரேயருக்கு செல்லவில்லை. அப்போது திடீரென அந்த மாணவி இரண்டாம் மாடியில் இருக்கும் அவரது வகுப்பறையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் அந்த பெண்ணின் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. மாடியில் இருந்து கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து சிறுமியை மீட்டு மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனைக்கு விரைந்து வந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாணவிக்கு உரியச் சிகிச்சை அளிக்குமாறு டீன் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து மாணவியைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ஆசிரியர்களிடம் இந்தச் சம்பவம் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், “மாணவிக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து மாணவியிடமே பேசினேன். குடும்பப் பிரச்சினை காரணமாகவே தற்கொலைக்கு முயன்றதாக அந்த மாணவி தெரிவித்தார். குடும்பப் பிரச்சினைகள் இருந்தால்.. மாணவ மாணவிகள் தங்களது பிரச்சனைகள் குறித்து ஆசிரியர்களிடம் கூறி அறிவுரை பெற வேண்டும்.
இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க மாணவ, மாணவிகளுக்கு கவுன்சிலிங் தர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யாவும் மருத்துவமனைக்கு வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த வாரம் கள்ளக்குறிச்சி சின்ன சேலம் பகுதியில் தனியார்ப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் மாணவி இறப்பிற்கு நியாயம் வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply