காங்கிரஸ் கட்சி யாரிடமும் சீட்டுக்காக கெஞ்சியது இல்லை – செல்வப்பெருந்தகை பேட்டி.!

சென்னை: காங்கிரஸ் கட்சி எந்தக் காலத்திலும் சீட்டுக்காக யாரிடமும் கெஞ்சியது இல்லை, தனித்துப் போட்டியா, கூட்டணியா என்பதை எல்லாம் தேசிய தலைமை முடிவு செய்யும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வெகுவிரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 4 கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை முடித்துவிட்டது திமுக.

தொடர்ந்து, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக மேற்கொண்டு வருகிறது. வரும் வாரத்தில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து, இறுதி பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக சீட் ஒதுக்குமா, அல்லது காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்படும் தொகுதியில் மநீம பகிர்ந்து கொள்ளுமா என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.

திமுக காங்கிரஸ் இடையே இன்னும் தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “காங்கிரஸ் எந்தக் காலத்திலும் சீட்டுகளுக்காக யாரிடமும் கெஞ்சியதில்லை. காங்கிரஸ் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை உள்வாங்கிய கட்சி. ஏற்றத்தாழ்வு இல்லாத கட்சி.

தேசிய தலைமை தான் முடிவு செய்யும்: திமுகவுடன் நாங்கள் தோழமை உணர்வோடு இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த தேர்தலை விட திமுக கூட்டணியில் அதிக இடங்களை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியா? தனித்து போட்டியா? என்பதை தேசிய தலைமைதான் முடிவு செய்கிறது. அதன்படி தற்போதைய நாடாளுமன்ற தேர்தலிலும் அகில இந்திய வழிகாட்டுதலோடு முடிவு செய்யும்.

கடந்த தேர்தலில் வழங்கிய தொகுதிகளுக்கு குறைவான இடங்களை வழங்கினால் தனித்து போட்டியிடுமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, “அது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்.

சீட்டுக்காக கெஞ்சியது இல்லை: பேச்சுவார்த்தையில் உடன்படாததால் 2014-ல் தனித்துதான் போட்டியிட்டோம். யாரிடமாவது கெஞ்சினோமா? காங்கிரஸ் கட்சி எந்தக் காலத்திலும் சீட்டுக்காக யாரிடமும் கெஞ்சியது இல்லை. காங்கிரஸும், திமுகவும் உண்மையான தோழமையோடு இருக்கிறது. திமுக தலைவரும், ராகுல் காந்தியும் அண்ணன் தம்பி போல பழகி வருகின்றனர். அப்படித்தான் எங்களுடைய உறவு இருக்கிறது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது நாங்கள் எப்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்? மார்ச் மாத இறுதியில் தானே? இப்போது ஏன் அவசரம்? ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது. படிப்படியாக ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு பரிமாண வளர்ச்சி ஏற்படுகிறது. கூட்டணி குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நல்ல முடிவு எட்டப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் சலசலப்பு?: காங்கிரஸ் கட்சி உடனான முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் அதன் பிறகு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியினர் அழைக்கப்படவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 8 தொகுதிகள் தருவதாகவும், அதில் ஒரு தொகுதியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், காங்கிரஸ் தரப்போ, கடந்த முறை போல புதுச்சேரியோடு சேர்த்து 10 சீட் வேண்டும் என உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் போட்டியிட்டு, 9 இடங்களில் வெற்றி பெற்றது. எனவே இந்த தேர்தலிலும் அதற்கு குறையாமல் கொடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதற்கு திமுக தரப்பு சம்மதிக்காததால் இழுபறி நீடிக்கிறது.

இதனிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடந்த திங்கள்கிழமை, காங்கிரஸ் கட்சி தலைமை அழைப்பின் பேரில் டெல்லி சென்றார். அங்கு கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள், தேசிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. அப்போது, 10 சீட்களுக்கு குறையாமல் பெறுமாறு தேசிய தலைமை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.