ஆகஸ்ட்டில் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்.!!

மதுரை : “ஆகஸ்ட்டில் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும். இத்திட்டம் வெற்றி தரும்” என இஸ்ரோவின் (வி.ஏ.எல்.எப்.) துணை இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.மதுரை குயின்மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், இஸ்ரோ செயல்பாடுகள் குறித்து விளக்கினார். அவர் பேசியதாவது:சாமானியர்களுக்கு பயன்படும் வகையில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சியில் ஈடுபட ஆர்வம் காட்டவேண்டும்.பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா பரவலால் மாணவர்கள் இஸ்ரோவை சுற்றிப்பார்க்க அனுமதி நிறுத்தப்பட்டது. மீண்டும் அனுமதி அளிக்க பரிசீலிக்கப்படும்.தோல்வி என்பது இறுதியானது அல்ல. மற்றொரு வெற்றியின் துவக்கமாக நினைக்க வேண்டும். ‘சந்திராயன் 2’ திட்டத்தில் கிடைத்த தோல்வியை பாடமாக கருதி ‘சந்திராயன் 3’ திட்டம் ஆகஸ்ட்டில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும். ‘ககன்யான்’ திட்டம்மூலம் மனிதர்களை அழைத்து செல்லும் பரிசோதனை ஓட்டம் இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என்றார்.பள்ளித் தலைவர் சந்திரன், நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன், கல்வி இயக்குனர் சுஜாதா, அப்துல்கலாம் விஷன் அமைப்பு தலைவர் செந்துாரான் பங்கேற்றனர்.