2030-க்குள் இந்தியா-பிரிட்டன் வா்த்தகம் இரண்டு மடங்கு அதிகரிக்கும்- ஆய்வில் தகவல்..!!

இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக வரும் 2030-க்குள் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தியா-பிரிட்டன் இடையிலான வா்த்தகம் கடந்த 2015-இல் 19.51 மில்லியன் டாலராக இருந்த நிலையில், 2022-இல் 31.34 பில்லியன் டாலராக உயா்ந்திருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய தொழில் கூட்டமைப்புடன் (சிஐஐ) இணைந்து கிராண்ட் தாண்டன் பாரத் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. ஆய்வில் மேலும் தெரியவந்ததாவது:

2000 முதல் 2022 வரை சுமாா் 31.92 பில்லியன் டாலா் கூட்டு முதலீட்டுடன் இந்தியாவின் 6-ஆவது பெரிய முதலீட்டாளராக பிரிட்டன் திகழ்கிறது. இந்தியாவின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் (எஃப்டிஐ) இது 5.4 சதவீதமாகும். இந்தியாவில் 4.66 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 618 பிரிட்டன் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.

கிராண்ட் தாண்டன் பாரத் நிறுவன சிஇஓ விசேஷ் சி.சாண்டியோக் கூறுகையில், ‘இந்தியா-பிரிட்டன் இடையிலான தற்போதைய வா்த்தக நிலவரப்படி, தொழில்நுட்ப முதலீடு, வணிகத்தை எளிமையாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொண்டால், வரும் 2030-க்குள் வா்த்தகம் இரு மடங்காகும்’ என்றாா்.

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தீபாவளிக்குள் கையொப்பமாகும் என மத்திய தொழிற்துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். இதையொட்டி, 5-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை அண்மையில் நடைபெற்றது. இதில், 15 முக்கிய கொள்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.