திருவண்ணாமலை : ”தமிழகத்தில், கொரோனா நான்காவது அலை வர வாய்ப்புள்ளது. மக்கள் ஓரிரு மாதங்களுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைப்பிடிக்க வேண்டும்,” என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.திருவண்ணாமலை அடுத்த கண்ணக்குறுக்கை கிராமத்தில், புதிய துணை சுகாதார நிலைய கட்டடத்தை துவங்கி வைத்த அவர் கூறியதாவது: ஜூனில் கொரோனா நான்காவது அலை வர வாய்ப்புள்ளது என, கான்பூர் ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது. சீனா, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் நம் நாட்டின் கேரளாவில் கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.இன்னும் ஓரிரு மாதங்களுக்கு, மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைப்பிடிக்க வேண்டும். கருணாநிதியால் புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தை, ஜெயலலிதா மருத்துவமனையாக மாற்றினார். அதில், 35 சதவீதம் கட்டடங்கள் மட்டும் மருத்துவமனையாக பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள கட்டடங்களில் மருத்துவ பணிகள் துவங்க, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply