தமிழகத்தில் 13 சதுப்பு நிலங்கள் உள்பட 26 சதுப்பு நிலங்களை ராம்சார் ஸ்தலங்களாக அறிவிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை.!!

ராமேசுவரம்: தமிழகத்தில் உள்ள 13 சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட நாட்டில் உள்ள 26 சதுப்பு நிலங்களை, ராம்சார் ஸ்தலங்களாக அறிவிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

புயல், வெள்ளப் பெருக்கு, சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடரிலிருந்து நிலப்பகுதிகளை காப்பதில் முக்கியப் பங்காற்றும் சதுப்பு நிலங்களின் அழிவைத் தடுப்பதற்காக 2.2.1971 அன்று ஈரான்நாட்டின் ராம்சார் நகரில் முதல் சர்வதேச மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சென்று உள்ளூர், மாநில, தேசிய, சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதற்கு ராம்சார் பிரகடனம் என்று பெயர்.

இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 172 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதனால் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கும் நடைமுறைகளை இந்தியாவும் கடைபிடித்து வருகிறது.

உலக அளவில் சதுப்பு நிலங்கள் 2 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளது. இந்தியாவில் மட்டும் சதுப்பு நிலங்கள் 4,975 சதுர கி.மீபரப்பளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம், மன்னார் வளைகுடா தீவுகள், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சதுப்பு நிலங்கள் உள்ளன.

ராமநாதபுரம் அருகே உள்ள சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள பறவைகள்.

ராம்சார் ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவில் 49 சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 2017-ம்ஆண்டு மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள 13 சதுப்பு நிலங்களை ராம்சார் ஸ்தலங்களாக அறிவிப்பதற்கான முன்மொழிவை தமிழக அரசு அனுப்பியது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது ஜெனீவா பயணத்தின்போது ராம்சார் தலைமையகத்தில், அதன் பொதுச் செயலாளர் மார்த்தா ரோஜாஸ் உர்ரேகோவிடம் இந்தியாவில் புதிதாக 26 சதுப்பு நிலங்களை ராம்சார் ஸ்தலங்களாக அறிவிக்க வலியுறுத்த உள்ளார்.

இந்த 26 சதுப்பு நிலங்களில் தமிழ்நாட்டிலிருந்து சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், கூந்தங்குளம், வடுவூர், வெள்ளோடு, வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி ஆகிய இடங்களில் உள்ள பறவைகள் சரணாலயங்கள், சுசீந்திரம், தேரூர், வேம்பன்னூர், பிச்சாவரம், பள்ளிக்கரணை ஆகிய சதுப்பு நிலங்கள் மற்றும் மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகம் ஆகிய 13 ஸ்தலங்கள் ஆகும்.

மேலும் ஒடிசாவிலிருந்து 4, மத்தியப் பிரதேசத்திலிருந்து 3, ஜம்மு -காஷ்மீரில் இருந்து 2 மற்றும் மகாராஷ்டிரா, மிசோரம், கர்நாடகா மற்றும் கோவாவில் இருந்து தலா ஒன்று ஆகியவையும் அடங்கும்.

இந்த முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டால் இந்தியா தனது 75-வதுசுதந்திர ஆண்டில் 75 ராம்சார் ஸ்தலங்களை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.