அடடா! சூப்பர்… விரைவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதி.. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அசத்தல் அறிவிப்பு..!!

சென்னை: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் அதற்கான விபரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெற்று, பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முக்கிய காரணமே தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்தான்.

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில்தான் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான பொருளாதார, நிதி ஆதார வழிகளை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஆய்வு செய்து வந்தது. எங்கிருந்து நிதி திரட்டி மாதம் 1000 ரூபாய் கொடுப்பது, இதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பது உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்தே குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகையை பெற பெயர் மாற்றம் செய்ய தேவையில்லை என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் அறிவித்தார்.
ஆனால் அதன்பின்பும் இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஆட்சி முடிந்து ஓராண்டு காலமாக தொடங்கப்படாமல் உள்ளது. பெண்களின் நலன் கருதி வேகமாக இந்த திட்டத்தை செயல்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு 25800 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். இந்த நிலையில்தான் சில மாற்றங்களுடன் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் அதற்கான விபரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ரூ.1000 வழங்கும் திட்டத்தை திமுக அரசு தொடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.