பாஜக அறிவித்த பந்த்-க்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் சென்ற தொழிலதிபர்..!

டந்த 23ஆம் தேதி நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 75 கிலோ வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதனை ஏற்ற உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்ய உத்தரவிட்டது. இதனை அடுத்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட பந்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கோவை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் “கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த முழு அடைப்பு பந்த் தேவையில்லாதது. இந்த பந்த் அறிவிப்பை காரணம் காட்டி பாஜகவினர் கடைகள் மற்றும் நிறுவனங்களை மூட கட்டாயப்படுத்துகின்றனர்.

முழு அடைப்பு என்ற பெயரில் வர்த்தக நடவடிக்கைகளை முடக்க யாருக்கும் உரிமை இல்லை. ஏற்கனவே அரசு போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தடுப்பு நடை நடவடிக்கைகளையும் எடுத்து உள்ள நிலையில் இந்த முழு அடைப்பானது தேவையற்றது” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை அவசரவாக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் மனுவை விசாரிக்க உள்ளது.