ஜெப ஆலயத்தில் தீவிரவாத தாக்குதல்.. தக்க பதிலடி கொடுப்போம்- இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு..!

ஸ்ரேல் நாட்டின் பிரதமர், ஜெப ஆலய தீவிரவாத தாக்குதலுக்கான பதிலடி வேகமானதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நெவ் யாகோவ் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு யூத வழிபாட்டு தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு நேரத்தில் வழிபாடு நடந்திருக்கிறது.

அந்த சமயத்தில், ஒரு மர்ம நபர் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்து அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் எட்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும், மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாக்குதல் நடத்தியவரை சுட்டுக் கொன்றார்கள்.

விசாரணையில் அவர் கிழக்கு ஜெருசலேமில் வசிக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த நபர் என்று தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நெதன்யாகு, தீவிரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். அது வேகமானதாகவும், வலுவானதாகவும் துல்லியமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

மேலும், அந்த தாக்குதலில் பலியான எட்டு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாத ஆதரவாளர்கள் மற்றும் வன்முறையை ஏற்படுத்துகிறவர்களை கைது செய்ய தொடங்கி விட்டோம். எங்களை காயப்படுத்த நினைத்தவரையும், அவருக்கு ஆதரவாக இருப்பவர்களையும் நாங்கள் காயப்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார்.