ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : பாஜக போட்டி உறுதி – 31-ம் தேதி வேட்பாளர் அறிவிக்க திட்டம்..!

ரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 7 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் களம் இறங்கி இருக்கிறார். நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியனவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

கமல்ஹாசன் தனது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி விட்டார். அ.தி.மு.க இரு பிரிவுகளாக நிற்பதால் பாரதிய ஜனதா கட்சி இதுவரை எந்த பிரிவுக்கும் வெளிப்படையான ஆதரவை தெரிவிக்கவில்லை. திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் இந்த பிரச்னையில் ஏதேனும் முடிவு கிடைக்குமா? என்பதும் உறுதியாக தெரியவில்லை.

அதே சமயம் இரட்டை இலை சின்னம் இல்லாமல் சுயேட்சை சின்னத்தில் நிற்கும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரிக்க பா.ஜ.க தயாராக இல்லை என தெரிய வந்திருக்கிறது. மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பாரதிய ஜனதா இடைத்தேர்தலில் ஒரு சுயேட்சை சின்னத்திற்கு வாக்கு கேட்பதை விரும்பவில்லை என கூறப்படுகிறது.

எனவே இ.பி.எஸ் தரப்பு சுயேட்சை சின்னத்தில் நிற்கும் பட்சத்தில் பாரதிய ஜனதா வேட்பாளரை இறக்க முடிவு செய்துவிட்டது. இது பற்றி இறுதி கட்ட ஆலோசனைக்கு 31-ம் தேதி பா.ஜ.க மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பி.ஜே.பி முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசிக்கிறார்கள். அந்த கூட்டத்தில் பா.ஜ.க வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டு அன்றே வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விடுவார் என்கிறார்கள்.

பா.ஜ.க வேட்பாளரை அறிவிக்கும் பட்சத்தில் அந்த வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்போம் என ஓ.பி.எஸ் கூறியிருக்கிறார். அதேபோல பாரிவேந்தர், ஏ.சி சண்முகம் ஆகியோரும் வெளிப்படையாக பா.ஜ.க முடிவை ஆதரிப்போம் என தெரிவித்துள்ளனர். ஜான்பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் ஆதரவையும் பெற்றுவிட முடியும் என பா.ஜ.க நம்புகிறது. டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஏற்கனவே வேட்பாளர் அறிவித்து விட்டாலும் கூட பா.ஜ.க கேட்டுக் கொண்டால் ஆதரவு கொடுப்பது பற்றி பரிசீலிப்பார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. அந்த முயற்சியையும் பா.ஜ.க தமிழக தலைமை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.