குடோனில் பயங்கர தீ விபத்து… பத்து டன் காய்கறிகள் எரிந்து சேதம்-ஸ்டார்ட் ஆகாத தீயணைப்புத்துறை வாகனம்… ஏய்!! தள்ளு.. தள்ளு.. என வடிவேல் காமெடி போல் முடிந்த சம்பவம்😃🤭..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 டன் எடையுள்ள காய்கறிகள் எரிந்து சேதமடைந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நஞ்சப்ப கவுண்டன் புதூர் பகுதியில் வசிக்கும் துரைசாமி என்பவர் பிரபல தனியார் நிறுவனத்திற்கு தனது  குடோனை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த தனியார் நிறுவனம் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்முதல் செய்யும்  வாழைக்காய், தேங்காய் மற்றும் காய்கறிகள் என பத்து டன் காய்கறிகள் இருப்பு வைத்திருந்தனர். இதற்கிடையே நேற்று மதியம்  இந்த குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ குடோன் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்ததால்  குடோனில் இருந்த காய்கறிகள் உட்பட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தது. இதற்கிடையே தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு வாகனத்தை வேறு பகுதிக்கு கொண்டு செல்வதற்காக இயக்கிய போது வாகனம் ஸ்டார்ட் ஆகாததால் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் தள்ளு தள்ளு என கூறி சுமார் பத்து நிமிடம் வாகனத்தை 50 க்கும் மேற்பட்டோர் தள்ளினர்.
இதைத்தொடர்ந்து தீயணைப்பு வாகனம் இயக்கப்பட்டு குடோனின் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் தீயணைப்பு பணி தொடங்கி நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும் அந்த குடோனில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கம்ப்யூட்டர் மற்றும் சில பொருட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தெரிந்து சேதம் அடைந்துள்ள நிலையில் சேத மதிப்பு குறித்து விபரம் தெரியவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினர்
குடோனில் இருந்த தேங்காய் உள்ளிட்ட காய்கறிகள் எரிந்து சேதமடைந்த காட்சி
தீயணைப்புத்துறை வாகனம் ஸ்டார்ட் ஆகாததால் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வாகனத்தை தள்ளு தள்ளு என தள்ளி சென்றனர்..