கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து..!

கோவை மாநகராட்சி உள்ள 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது சேகரிக்கப்பட்ட பல லட்சம் டன் குப்பைகள்’ “பயோ” முறையில் உரமாக்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் “பயோ” உரம் உற்பத்தி நிலையம் அருகே உள்ள குப்பை கிடங்கில் ஒரு பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. அப்போது அங்கிருந்த தீயணைப்பு வாகனம் மூலம் தீயை அணைக்கும் பணி நடந்தது. ஆனால் வெப்பம் காரணமாக தீ மேலும் மள, மள வென வேகமாக பரவியது .அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து கோவை மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை தலைமையில்,2 தீயணைப்பு வாகனங்களுடன், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். .மேலும் தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் இருக்க பொக்லைன் இயந்திரம் மூலம் குப்பைகளை அகற்றும் பணியும் நடந்து வருகிறது.இதை தொடர்ந்து அந்த பகுதியில் ஒரு தீயணைப்பு வாகனம் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.