இந்திய மொழிகளின் தொழில்நுட்ப மேம்பாடு: ‘பாரத் நிலேகனி மையம்’ சென்னை ஐஐடியில் தொடக்கம்..!!

சென்னை: எளிய மக்கள் பயன்பாட்டுக்கேற்ப இந்திய மொழி தொழில்நுட்பத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.36கோடி மதிப்பில் ‘பாரத் நிலேகனி மையம்’ சென்னை ஐஐடியால் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய மொழிகளுக்கு செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொழில்நுட்ப வளங்களை கட்டமைக்கும் நோக்கத்தில் சென்னை ஐஐடி சார்பில் ‘ஏஐ4 பாரத்’என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த2 ஆண்டாக இந்திய மொழி தொழில்நுட்பத்துக்காக இயந்திர மொழிபெயர்ப்பு (Machine Translation), தானியங்கிப் பேச்சு அறிதல் (Speech Recognition) உட்பட பல்வேறு பங்களிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக இந்திய மொழி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் சென்னை ஐஐடியில் ‘பாரத் நிலேகனி மையம்’ தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நிலேகனி தொண்டு நிறுவனம் ரூ.36 கோடி நிதியுதவிவழங்கியுள்ளது.

இதன் தொடக்க விழா கிண்டி ஐஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மையத்தை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, நந்தன் நிலேகனி ஆகியோர் திறந்து வைத்தனர்.

நிலேகனி மையப் பணிகள் குறித்து ஐஐடி கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் மிதேஷ் எம்.கப்ரா கூறியதாவது: இந்தியாவில் வளமான பன்முகத்தன்மை கொண்ட மொழிகள் உள்ளன.

தற்போது வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் காலத்துக்கேற்ப சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் மொழித் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது முக்கியமாகும். மொழித் தொழில்நுட்பத்தில் ஆங்கிலம் உட்பட சில மொழிகளே முன்னேறியுள்ளன.

இந்திய மொழிகள் பின்தங்கியுள்ளன. இந்த இடைவெளியை குறைப்பதுதான் இந்த மையத்தின் நோக்கமாகும். இதுதவிர செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி குடிமக்களுக்கான அனைத்து சேவைகளும், தகவல்களும் அவரவர் தாய்மொழியில் கிடைக்கவழிசெய்ய வேண்டும்.

இந்த திட்டத்தில் பல்வேறு அதிநவீன வளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை https://ai4bharat.iitm.ac.in/ என்ற இணையதளம் வழியாக இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.