பட்டம் பெறுவது வேலை வாய்ப்புக்காக மட்டுமல்ல… அறிவாற்றலை மேம்படுத்துவதும் தான்.. முதல்வர் ஸ்டாலின் உரை ..!!

சென்னை: ‘மாணவர்கள் பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல, அறிவாற்றலை மேம்படுத்த’ என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்த பிரதமருக்கு மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கையில் பட்டத்துடனும், கண்களில் கனவுகளுடனும் காத்திருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துகள். மாணவர்கள் பிரதமர் கையால் பட்டம் பெறுவது பெருமைமிகு தருணம் ஆகும். பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல, அறிவாற்றலை மேம்படுத்த. தேசிய தரவரிசை பட்டியலில் தமிழக கல்வி நிறுவனங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதை மத்திய அரசின் ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.பண்டைகாலம் தொட்டு தமிழர்கள் எப்போதும் தொழில்துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர். இடைநிற்றல் இன்றி, அனைவருக்கும் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தடையற்ற கல்வி வழங்குவதே எங்களது இலக்கு. படித்து பட்டம் பெறுவோருக்கு வேலைவாய்ப்பு பெறும் சூழலை உருவாக்கி வருகிறோம்.

செமிகண்டக்டர்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், லித்தியம் பேட்டரி உள்ளிட்ட எதிர்கால உற்பத்தி துறையில் தமிழக அரசு கவனம் செலுத்தி முதலீடு செய்துள்ளது. தமிழகம் 4ம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு இளைஞர்கள் தயாராக வேண்டும். மாணவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு தடையாக எது இருந்தாலும் அதனை தகர்த்து முன்னேறுங்கள். பழமைவாத கருத்துகளை புறந்தள்ளி, புதுமை கருத்துகளை மாணவர்கள் ஏற்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.மீண்டும் ஒன்றியம் வார்த்தைபிரதமர் மோடி, கவர்னர் ரவி உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருக்க, முதல்வர் ஸ்டாலின் பேச்சை துவக்கும்போது மத்திய அமைச்சர் எல்.முருகனை குறிப்பிடும் போது ஒன்றிய அமைச்சர் என குறிப்பிட்டார். ஏற்கனவே நேற்று (ஜூலை 28) நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிலும் பிரதமர் மேடையில் இருக்கும்போது முதல்வர் ஸ்டாலின், ஒன்றியம் என்னும் வார்த்தையை குறிப்பிட்டார்.