தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி இந்து அமைப்புகள் சார்பில் கோவையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். அவ்வாறு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் விநாயகர் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஒருவர் பதிவிட்டு இருந்தார். அதை கோவை நாகராஜபுரம் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த ஹரிதாஸ் என்ற டீக்கடைக்காரர் பிறருக்கு பகிர்ந்து அனுப்பி உள்ளார். இதை பார்த்த இந்து முன்னணியை சேர்ந்த ஆனந்த் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் மத உணர்வுகளை புண்படுத்துதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஹரிதாசை கைது செய்தனர்.