தமிழ்நாட்டின் கடன் சுமை 22.43% அதிகரிப்பு- சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..!

டந்த 2020-21 நிதியாண்டில், தமிழ்நாட்டின் கடன் 22.43 சதவிகிதம் உயர்ந்து 5,18,796 கோடி ரூபாய் தொட்டுள்ளது என இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஏஜி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நிதிநிலை பொறுப்பு சட்டத்தில் நிர்ணயித்த இலக்கை அடைவதற்கும், வருவாய் செலவினங்களைச் சந்திக்க மூலதன வரவுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கும், அதன் சொந்த வருவாயைப் பெருக்குவதன் மூலம் விருப்பதிற்கு ஏற்ப செலவு செய்வதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்க நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மூலதனச் செலவு ரூ. 36,902 கோடி ஆகியிருப்பது இந்த ஆண்டில் அதிக நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது ஆகியவை வருவாய் செலவினங்களுக்காக கடன் வாங்கப்பட்டு அது பயன்படுத்தப்பட்டிருப்பதையும் கடன் 22.43 சதவீதம் அதிகரித்துள்ளதையும் குறிக்கிறது.

தமிழ்நாடு நிதிநிலை பொறுப்பு சட்டம் 2003இன்படி, கடனுக்கான மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் 25.20 விழுக்காட்டிற்குள் இருக்க வேண்டும். ஆனால், அது தற்போது 26.94 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

நிலுவையில் உள்ள மொத்த கடனில் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிய கடனான 633.99 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டால் கடனுக்கான மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் 27.30 சதவிகிதமாக உயரும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி நிலையில், 2016-17 ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை ரூ.12,964 கோடியில் இருந்து 2020-21இல் ரூ.62,326 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், அதிகரித்து வரும் இந்த போக்கால் தமிழ்நாடு நிதிநிலை பொறுப்பு சட்டம் நிர்ணயித்த இலக்கை மாநிலம் கடைப்பிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வருவாய் வரவுகள், வருவாய் செலவினங்களைக் கூட ஈடுசெய்ய முடியாததால் வருவாய் பற்றாக்குறை இருப்பது கவலையளிக்கிறது. மேலும், மூலதன வரவுகளின் ஒரு பகுதி வருவாய் செலவினங்களைச் சமாளிக்க பயன்படுத்தப்பட்டது. மூலதன வளங்களின் இருப்பைக் குறைத்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, வருவாய் செலவினத்தை ஈடு செய்வதற்காக வாங்கப்படும் கடனை தவிர்க்க நிதி ஆதாரத்தை பெருக்கி சொந்த வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு நிதிநிலை பொறுப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கை அடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.