தொண்டாமுத்தூர் வார சந்தையில் கூடுதல் சுங்கம் வசூல் – தமிழக வியாபாரிகள் சம்மேளனம் புகார்.!!

கோவை : தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி பொதுச்செயலாளர் உதயகுமார், பொருளாளர் வெனீஸ் ,செயலாளர் சூலூர் குணசிங்,ராமநாதபுரம் கிளைச் செயலாளர் சேவியர் ராஜா,மற்றும் சம்மேளன நிர்வாகிகள் சித்திரை பாண்டி,  எம். கே. விஜி ஆகியோர் இன்று தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி மற்றும் செயல் அலுவலரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர் .

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-கடந்த ஆண்டு தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுங்கம் மற்றும் வார சந்தை ஏலம் நடந்தது. இங்கு ஏலம் எடுத்தவர் பேரூராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் அதிகமாக வசூலித்து வருகிறார். இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்துள்ளோம்.பேரூராட்சி நிர்வாகம் ஆட்டோவுக்கு நிர்ணயித்த ரு 40 ரூபாய்க்கு பதிலாக 50 ரூபாயும், வார சந்தையான சனிக்கிழமை அன்று அதிகபட்சமாக 100 ரூபாயும் வசூலிக்கிறார். ரசீது எதுவும் கொடுப்பதில்லை.. மேலும் வியாபாரிகள் மொத்தமாக பொருட்கள் வாங்கி தங்கள் கடைக்கு வாகனத்தில் ஏற்றி வருவதற்கும் வசூல் கேட்டு மிரட்டுகிறார். இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மேற்படி அதிக கட்டணம் வசூலிக்கும் குத்தகைதாரர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.