சென்னை: இந்திய மருத்துவத்துறையில் தமிழகம் முதன்மையான மாநிலமாக இருப்பதாகவும் இந்த சாதனை தொடரும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை இந்தியாவே பாராட்டுவதாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இந்தியாவில் மாநில அரசு மருத்துவமனைகளில் முதலாவதாக சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், 34 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
இந்த அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையம் வாயிலாக அறுவை சிகிச்சை நிபுணர்களால், கடினமான அறுவை சிகிச்சைகளை மிக துல்லியமாகவும் நுணுக்கமாகவும், ரோபோடிக் கருவிகள் மூலம் மேற்கொள்ள இயலும். லேபராஸ்கோபியின் அதிநவீன முன்னேற்றமே ரோபோடிக் அறுவை சிகிச்சை ஆகும்.
ரோபோடிக் சிகிச்சையில் உள்ள ENDO WRIST மூலம் 360 டிகிரி வரை சுழன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
ரோபாட்டிக் அறுவை சிகிச்சை கருவிகளில் 3D விரிவாக்கம் உள்ளதால் மிக எளிதில் துல்லியமாக நாளங்களின் அமைப்புகளை கண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலும். ரோபோடிக் அறுவை சிகிச்சையின்போது, நோயாளியின் உடம்பில் சிறிய தழும்புகளே ஏற்படுவதால், ரத்த இழப்பு, வலி மற்றும் நோய்த்தொற்று பெரிதும் குறைவதோடு, அறுவை சிகிச்சையின் பின் வலி நிவாரண ஊசிகள் அதிகம் தேவைப்படுவதில்லை.
மிகப்பெரிய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களும் விரைவாக குணமடைந்து வீடு திரும்பலாம். சிறுநீரக அறுவை சிகிச்சை, குடல்நோய் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை ஆகிய அறுவை சிகிச்சைகளுக்கு இந்த அதிநவீன இயந்திரம் பயன்படும்.
இதனிடையே சென்னை பரங்கிமலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்திய மருத்துவத்துறையில் தமிழகம் முதன்மையான மாநிலமாக இருப்பதாகவும் இந்த சாதனை தொடரும் என்றும் கூறினார். இந்தியாவிலேயே முதன் முறையாக ரோபாடிக் அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை இந்தியாவே பாராட்டுவதாகவும் கூறினார். மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சருக்குத்தான் அந்த பெருமை சென்று சேரும் என்று கூறினார்.
விழாவில் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கொரோனா இரண்டாவது அலை வீசிய கடினமான சூழ்நிலையில் திமுக அரசு பதவியேற்றதாக கூறினார். கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரு மாத காலம் அனைவரும் இரவு பகல் பாராமல் தலைவர் ஸ்டாலின் உழைத்தனர் அதற்கு உறுதுணையாக நின்றவர் மா.சுப்ரமணியம் என்றார். இதன்காரணமாக சில மாதங்களிலேயே கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக உதயநிதி தெரிவித்தார்.
Leave a Reply