சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி, போயர் தெருவைச் சேர்ந்தவர் தம்பிதுரை(வயது55). கட்டுமானத் தொழிலாளி. இவர் நேற்று காலை கோத்தகிரிக்கு வேலை தேடி வந்தார்.அங்கு பல இடங்களில் வேலைத் தேடி பார்த்தும் வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து தம்பிதுரை கோத்தகிரியில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக பஸ்சில் மேட்டுப்பாளையம் புறப்பட்டார். அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே பஸ்சை நிறுத்துமாறு கூறி முள்ளூர் கிராமத்தில் இறங்கினார். பின்னர் அவர் அங்குள்ள பாலத்தில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென தம்பிதுரை பாலத்தில் இருந்து தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். அப்போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர் மாரடைப்பு காரணமாக இறந்தாரா? அல்லது பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்து உயிரிழந்தாரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தம்பிதுரை இறந்தது குறித்து சேலத்தில் உள்ள அவரது மனைவி, மகன் உறவினர்களுக்கு தகவல் அளிக்கபட்டது. அவர்கள் இங்கு வந்து தம்பிதுரையின் உடலை வாங்கி சென்றனர்.
Leave a Reply