தமிழக அரசுக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் இல்லை- அண்ணாமலை பேச்சு..!

தமிழக அரசு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் உள்ளது என பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாழ்வுரிமை மாநாடு 3
நாட்களுக்கு நடத்தப்பட்டது. நிறைவு விழாவில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில், பிரதமரின் கிசான் நிதி தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகளுக்கு ஆன்லைன் முறையில் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு விவசாயிகளின் மீதான ஆர்வம் இதனால் வந்துள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ரூ. 10 லட்சம் வழங்கி ஊக்கப்படுத்தியதால் நீரா போன்ற பானங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்திய அளவில் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன.

விவசாயிகளை வெறும் வாக்கு வங்கிகளாக கருதியவர்கள் மத்தியில் விவசாயிகளின்
வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற சிந்தனையை பிரதமர் மோடி
உருவாக்கினார். கடன் தள்ளுபடிக்காக விவசாயிகள் காத்திருக்காமல் அவர்களின்
விளைபொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்பினை பிரதமர் உருவாக்கினார். 21 பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைக் கொடுத்துள்ளோம். 2014 ஆம் ஆண்டு நெல்லுக்கு குறைந்தபட்ச விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,310 இருந்தது. தற்போது ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,040 வழங்கப்படுகிறது. சுமார் 56 சதவீதம் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கிசான் கிரடிட் கார்டு மூலம் வருடத்திற்கு 3 சதவீத வட்டிக்கு விவசாயிகளுக்கு
கடன் கிடைக்கிறது. தமிழகத்தில் 83 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கிசான்
கிரடிட் கார்டு மூலம் கடன் பெற்று பயனடைந்து வருகின்றனர். அவினாசி – அத்திகடவு திட்டம் மத்திய அரசின் ரூ. 1,000 கோடி பங்களிப்புடன் தொடங்கி நடைபெற்று 96 சதவீதம் பணிகள் முடிவுற்றுவிட்டன. ஆனால், கடந்த 15 மாதங்களாக திமுக ஆட்சியில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய் போட முடியாமல் திட்டம் அப்படியே நிற்கிறது.
மாவட்டந்தோறும் முக்கிய விளைபொருட்களை விற்பனைக்கு சந்தைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கு ஒரு விவசாயப் பொருள் விற்பனையாகி வருகிறது. விவசாயப் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.