அமெரிக்காவில் சோழர் கால பார்வதி சிலை-மீட்கும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்.!

கும்பகோணம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் சோழர் கால பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

கும்பகோணம் அருகே தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது.கடந்த 1971 ஆம் ஆண்டு கோவில் பூட்டு உடைக்கப்பட்டு பார்வதி சிலை, நடராஜர் சிலை,கோலு அம்மன் சிலை உட்பட 5 பஞ்ச லோக சிலைகள் திருடப்பட்டது.

இதனை அவ்வூரைச் சேர்ந்த கே.வாசு என்பவர் 2019 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். மேலும் அவர் புகாரில் கடந்த 51 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இந்த சிலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், உடனடியாக கண்டுபிடிக்கக்கோரியும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியங்கள் மற்றும் ஏல மையங்களில் தேடி வந்தனர். அப்போது அமெரிக்காவின் போன்ஹாம்ஸ் ஏல இல்லத்தில் 50 செமீ உயரம் கொண்ட சோழர் காலத்து பார்வதி சிலை ஒன்று இருப்பதை சிலை கடத்தல் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள பார்வதி சிலையின் புகைப்படத்தை வைத்து ஆராய்ந்து ஒப்பிடும் போது நடனபுரீஸ்வரர் கோவிலில் காணாமல் போன பார்வதி சிலை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் மாநில தொல்லியல் துறையின் நிபுணரும் இதை உறுதி செய்தார்.

இந்த பார்வதி சிலை 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும், 16 கோடிக்கு மேல் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 1971ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட இந்த சிலை நியூயார்க்கில் விற்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஆவணங்களை அடிப்படையாக வைத்து அமெரிக்காவில் உள்ள ஏல இல்லத்தில் இருந்து யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் பார்வதி சிலையை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.