‘ஸ்வநிதி மஹோத்ஸவ்’ சுயசார்பு சாலையோர கொண்டாட்டம் 

‘ஸ்வநிதி மஹோத்ஸவ்’ சுயசார்பு சாலையோர கொண்டாட்டம் 

கோவை வஉசி மைதானத்தில் ‘ஸ்வநிதி மஹோத்ஸவ்’ என்ற தலைப்பில் சுயசார்பு சாலையோர கொண்டாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் சாலையோர வியாபாரிகள் ஸ்டால்கள் அமைத்து பொருட்களை விற்பனை செய்தனர். குறிப்பாக சாலையோர சிற்றுண்டி உணவு வகைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்களின் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மத்திய அரசின் கடன் பெற்று சிறப்பாக செயல்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் புதிதாக கடன் உதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்ததாவது,

‘கொரோனா காலகட்டத்தில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு பெரிதாக எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஆனால் தினசரி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருவாய் மூலம் குடும்பத்தினருக்கு உணவு வழங்கும் சூழலிலுள்ள எளிய மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆத்ம நிர்பர் எனும் திட்டத்தை அறிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள், சிறு குறு தொழில் நிறுவனத்தினர், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைந்தனர். குறிப்பாக இலவச கேஸ் சிலிண்டர், கடந்த செப்டம்பர் மாதம் வரை இலவசமாக 5 கிலோ அரிசி மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை மத்திய அரசால் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளை இணைத்து அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையின் மூலம் 10,000 ரூபாய் உதவியை அவர்களது வங்கி கணக்கிற்கு எளிய முறையில் நேரடியாக செலுத்தப்பட்டது. இதுதான் மத்திய அரசின் ஸ்வநிதி திட்டம்.

இத்திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகள் பெரும்பாலானோர் பயனடைந்தனர். இத்திட்டம் 2020 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட போது பல்வேறு சிக்கல்கள் இருந்தது. அதாவது அதற்கான இணைய தளத்தில் பதிவு செய்வதில் பல சிரமங்கள் இருந்தது. இதனை சரி செய்யும் வகையில் முகாம்களை நடத்தினோம். சாலையோர வியாபாரிகளுக்கு டெல்லியில் பேசி நிதி உதவி பெறும் முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறேன்.

சாலையோர வியாபாரிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதை சரிசெய்யும் விதமாக கோவை மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட இடங்களில் சாலையோர வியாபாரிகள் கடை நடத்தலாம் என்றும், குறிப்பிட்ட இடங்களில் கடை அமைக்க கூடாது எனவும் அறிவித்துள்ளனர். ஆனால் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சாலையோர வியாபாரிகளை கடை அமைக்க கூடாது என சொல்வது சரியானதாக இருக்காது. எனவே இதனை மாநகராட்சி கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இது போன்ற மத்திய அரசின் அனைத்து விதமான நிதி உதவி திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல உங்கள் சார்பில் நான் தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்தார்.