தேசிய நீர் மேலாண்மை விருது: தமிழகத்துக்கு 3 வது இடம்.!!

மத்திய அரசின் நீர் மேலாண்மைத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்துக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் தில்லியில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகளை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வழங்கினார். நீர் மேலாண்மையில் மக்களையும் பல்வேறு தரப்பினரையும் முழுமையாக ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், தேசிய நீர் விருதுகளை மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தது. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பயனுள்ள நீர் மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களை ஊக்குவிக்கவும் இந்த விருது வழங்கப்படுகிறது. இதில் சிறந்த மாநிலம், மாவட்டம், ஊராட்சி, பள்ளிகள், தனியார் நிறுவனம், தொழிற்சாலைகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 11 பிரிவுகளில் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் 57 தேசிய நீர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
நீர் மேலாண்மையில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களை ஜல் சக்தித் துறையின் சிறப்புக் குழு, மாநில வாரியாக நேரில் கள ஆய்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.
தமிழகம் 3-ஆம் இடம்: நிகழாண்டு மூன்றாவது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா தில்லி விஞ்ஞான் பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தை உத்தர பிரதேச மாநிலம் பிடித்தது. இதற்கான விருதை அந்த மாநிலத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இரண்டாம் இடத்தை ராஜஸ்தான் மாநிலம் பெற்றது. மூன்றாம் இடம் பிடித்த தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விருது வழங்கினார். தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். 2020-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இரண்டாவது தேசிய நீர் விருதில், தமிழகம் முதலாவது இடத்தைப் பிடித்திருந்தது.
காவேரிப்பட்டினம் பள்ளிக்கு முதல் பரிசு: நீர் மேலாண்மையில் சிறந்த பள்ளிகள் பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அந்த விருதை பள்ளியின் தலைமையாசிரியை வளர்மதி பெற்றுக் கொண்டார். புதுச்சேரி மணப்பட்டு அரசுப் பள்ளி மூன்றாவது இடம் பெற்றது. விருதை பள்ளித் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி பெற்றுக்கொண்டார்.
செங்கல்பட்டு, மதுரைக்கு பரிசு: சிறந்த ஊராட்சி பிரிவில் (தென் மண்டல அளவில்) செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புதூர் ஊராட்சி இரண்டாம் பரிசு பெற்றது. இதற்கான விருதை ஊராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் பெற்றுக் கொண்டார். சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புப் பிரிவில் மதுரை மாநகராட்சிக்கு 3-ஆவது பரிசு கிடைத்தது. இதற்கான விருதை மதுரை மேயர் இந்திராணி பெற்றுக் கொண்டார்.
சிறந்த தொழில் பிரிவில் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்துக்கு 2-ஆவது பரிசும், சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்துக்கு 2-ஆவது இடத்துக்கான பரிசும் வழங்கப்பட்டது. இந்த விருதுகளையும், சான்றிதழ்களையும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜல் சக்தித் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல், விஸ்வேஷ்வர் துடு ஆகியோர் கலந்து கொண்டனர்.