ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.!!

புது தில்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, பரோலில் இருந்தாலும் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது, எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் தற்போது சிறை விடுப்பில் இருந்து வருகிறார். அவருக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞருக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பேரறிவாளனுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளன் விவகாரம் தங்கள் அதிகாரத்தின் கீழ் வரும் போது தமிழக அரசு முடிவெடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட அரசுதான் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்று மத்திய அரசு கூறியது.

அப்படி என்றால் அதுமாநில அரசுதான் என மத்திய அரசின் வாதம் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

சிறை விதிகளுக்குள்பட்டு பரோல் வழங்கலாமே தவிர ஜாமீன் வழங்கக் கூடாது என்று மத்திய அரசு தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மீதான தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது. குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியே முடிவெடுக்க முடியும் என்றும் பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

அதிகாரம் பற்றி பிறகு விசாரிக்கிறோம். இப்போது ஜாமீன் பற்றி விசாரிக்கலாம். 3 முறை பரோல் வழங்கப்பட்ட போதும் விதிகளுக்கு உள்பட்டுத்தான் வழங்கப்பட்டுள்ளது என்று பேரறிவாளன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

பேரறிவாளன் ஏற்கனவே 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். மேலும் தாமதம் செய்வது எப்படி? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, ஏற்கனவே தண்டனை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு சலுகையை எப்படி ஏற்பது என்று மத்திய அரசு கேட்க, தண்டனை குறைப்பு என்பதை உச்ச நீதிமன்றம்தான் வழங்கியது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு, ஆயுள்தண்டனை என்றால் ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் என்பதுதான் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் எடும் எதிர்ப்பையும் மீறி, உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது. 1991ஆம் ஆண்டு பேரறிவாளன் கைது செய்யப்பட்ட பிறகு, 30 ஆண்டுகளுக்குப் பின் தற்போதுதான் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.